உலகளவில் ஒரு சில விமான நிறுவனங்கள் தரமான சேவை, புதுமையான விஷயங்களை விமானப் போக்குவரத்தில் புகுத்தி வருவது மற்றும் வாடிக்கையாளர் திருப்தி போன்றவற்றில் தொடர்ந்து தனித்து நிற்கின்றன. என்ன தான் உலகம் முழுக்க பல விமான சேவைகள் இருந்தாலும் சில நிறுவனங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி உலகில் காணப்படும் சிறந்த விமான சேவை வழங்கும் நிறுவனங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways):
கத்தார் ஏர்வேஸ் பெரும்பாலும் உலகின் சிறந்த விமான நிறுவனமாகப் போற்றப்படுகிறது. தோஹாவை(Doha) தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் ஆடம்பரமான பயண அனுபவத்திற்காக உலகம் முழுக்க புகழ்பெற்றது. இங்கு வசதியான இருக்கைகள், நல்ல உணவு வகைகள் மற்றும் அதிநவீன பொழுதுபோக்கு அமைப்பு ஆகியவற்றை கொடுக்கிறார்கள். சிறந்த விமான சேவையை பயணிகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பை, அவர்கள் தரும் தரத்தின் வழியாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அனைவருக்கும் உணர்த்தி கொண்டு வருகிறார்கள். இப்படி வாடிக்கையாளர் சேவையில் கத்தார் ஏர்வேஸின் தொடர்ச்சியான தரம் மற்றும் தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்தி வருவது, இந்நிறுவனத்தை உலகளவில் ஓர் உயர் நிலையில் தக்க வைக்க உதவுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines):
அடுத்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரமான சேவைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. வாடிக்கையாளர்களிடம் காட்டும் அர்ப்பணிப்பானது, அங்கு பணிபுரியும் விமான கேபின் குழுவினர் மற்றும் பயன்படுத்தும் உயர்தர வசதிகளில் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல்காரர்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு மெனுகைகளையும் மற்றும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு அமைப்புகளையும் வழங்குகிறார்கள். அதன் 180 க்கும் மேற்பட்ட விமானங்கள் உலகளவில் 110 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சேவை மேற்கொள்கின்றன.
எமிரேட்ஸ் (Emirates):
துபாயை(Dubai) தளமாகக் கொண்ட எமிரேட்ஸ், உலக முழுக்க அதன் விரிவான நெட்வொர்க் மற்றும் ஆடம்பரமான வசதிகளுக்கு பெயர் பெற்றது. ஆறு கண்டங்களில் உள்ள 152 இடங்களுக்கு பயணிகளை இணைக்கும் வகையில், 262 விமானங்களை இந்த விமான நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. எமிரேட்ஸின் தனித்துவமான அந்தஸ்துக்கு அதன் விசாலமான அறைகள், பிரீமியம் ஓய்வறைகள் மற்றும் எண்ணற்ற பொழுதுபோக்கு அமைப்பு ஆகியவை நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.
ANA (All Nippon Airways):
ANA (ஆல் நிப்பான் ஏர்வேஸ்), ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனம், சரியான நேரத்தை கடைப்பிடிப்பதிலும் மற்றும் தரமான சேவைக்காகவும் புகழ்பெற்றதாகும். டோக்கியோவின் நரிடா(Narita) மற்றும் ஹனேடா(Haneda) என இரண்டு விமான நிலையங்கள் மூலம் தடையற்ற இணைப்புகளை உலகம் முழுக்க இந்நிறுவனம் வழங்குகிறது. வாடிக்கையாளர் சேவையில் ANA முக்கியத்துவம் கொடுப்பது அதன் நன்கு வடிவமைக்கப்பட்ட விமான கேபின்கள் மற்றும் உயர்தர உணவுகளின் மூலம் தெளிவாகத் தெரியும்.
கேத்தே பசிபிக் ஏர்வேஸ் (Cathay Pacific Airways):
ஹாங்காங்கில் உள்ள கேத்தே பசிபிக் ஏர்வேஸ், சொகுசு வசதி மற்றும் தரமான சேவையில் கவனம் செலுத்தி வரும் ஒரு பிரீமியம் விமான நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் நெட்வொர்க் உலகம் முழுவதும் 200 இடங்களுக்கு மேல் உள்ளது. அவர்களின் நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான அர்ப்பணிப்பு போன்றவை அவர்கள் தரும் சொகுசான பயண அனுபவத்திலேயே அனைவருக்கும் தெரிந்துவிடும். மேலும், ஒன் வேர்ல்ட் கூட்டணியில்(one world alliance) இந்த விமான நிறுவம் சேர்ந்திருப்பது அதன் உலகளாவிய இருப்பை மேலும் பலப்படுத்துகிறது.