Big Bang theory 
அறிவியல் / தொழில்நுட்பம்

'பிக் பேங்க்' என்றால் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

ஆர்.வி.பதி

'பிக் பேங்க்' என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். பிக் பேங்க் என்றால் என்னவென்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

பிரபஞ்சம் என்பது ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு அறிவியல் களம். பிரபஞ்சம் குறித்து இன்றளவும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. அவ்வப்போது பல புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அவை அனைத்தும் புதிர் நிறைந்ததாகவே உள்ளன. ஆதி காலத்தில் பிரபஞ்ச ஆராய்ச்சிகளில் இந்தியா, கிரேக்கம் மற்றம் அரபு நாடுகள் அதிக அளவில் ஈடுபட்டுச் சிறந்து விளங்கின.

கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த 'ஆனக்ஸாகரஸ்' என்பவர் தனது வாழ்நாள் முழுவதையும் பிரபஞ்சத்தை ஆராய்வதற்காகவே செலவிட்டார். அவர் எப்போதும் வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். கூர்மையான அறிவு படைத்த அவர் பல அரிய புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். தொலைநோக்கி ஏதுமின்றி அவர் பலவிஷயங்களைக் கண்டுபிடித்தது எப்படி என்பது இன்று வரை புதிரான ஒரு விஷயமாகவே உள்ளது.

‘பிரபஞ்சம் என்பது எல்லையற்ற ஒரு விஷயம் என்றும் அதற்குள் அடங்கியுள்ள விஷயங்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்காதது. இத்தகைய பொருட்கள் அனைத்திற்கும் தொடக்க காலமும் முடிவு காலமும் இருக்கிறது’ இவையே தொடக்க காலத்தில் ஆனக்ஸாகரஸ் கண்டுபிடித்து அறிவித்த விஷயங்களாகும்.

ஆதி காலத்தில் பிரபஞ்சமானது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரியதொரு பந்து வடிவத்தில் இருந்தது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் தற்போது மிகவும் பிரம்மாண்டமாய் கற்பனைக்கு எட்டாத அளவில் பரவி காணப்படும் இந்த பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள அனைத்து விஷயங்களும் தொடக்கத்தில் மிக அடர்த்தியான பந்து போல காணப்பட்டது. இந்த பிரபஞ்சப் பந்தானது மிகவும் வெப்பமாகவும் மிகவும் அடர்த்தியாகவும் காணப்பட்டது. நாளடைவில் அது பயங்கரமான ஒரு வெடிப்பிற்கு உள்ளானது. இந்த அடர்த்தியான பந்திற்குள்ளாகவே தற்பொழுது நாம் காணும் அனைத்தும் அடங்கி இருந்தன. இந்த பிரபஞ்சப் பந்தானது திடீரென்று வெடித்துச் சிதறியதன் விளைவாக பலவிதமான புதிய கிரகங்கள், விண்மீன்கள் போன்றவை உருவெடுத்தன. இதை ஆங்கிலத்தில் 'Big Bang' என்றும் தமிழில் 'மகா வெடிப்பு' என்றும் அழைக்கிறார்கள். இத்தகைய மகா வெடிப்பினால் பிரபஞ்சமானது பல பகுதிகளாகப் பிரிந்து தற்போது காணப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

வெடிப்பிற்குள்ளான பிரபஞ்சப் பந்தின் பொருட்கள் வெகு தொலைவிற்கு சிதறிப் போயின. சிதறிய பொருட்கள் யாவும் தொடர்ந்து விநாடிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய சிதறிய பொருட்களே பின்னர் காலக்சிகளாகவும் கிரகங்களாகவும் உருவெடுத்தன. இவையாவும் தற்போது வரை விரிவடைந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை 'விரிவடையும் பிரபஞ்சம்' என்று அழைக்கிறார்கள். நமது சூரியக்குடும்பம் தோன்றி ஐந்து பில்லியன் வருடங்களாகின்றன. இதற்கு பத்து பில்லியன் வருடங்களுக்கு முன்னால் அதாவது பதினைந்து பில்லியன் வருடங்களுக்கு முன்னால் இந்த பிக் பாங்க் நிகழ்ச்சி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிக் பேங்க் பற்றிய கருத்தைப் பற்றி முதலில் எடுத்துரைத்தவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜார்ஜ் லமாய்டர் என்பவராவார். 'பிக் பேங்க்' என்ற வார்த்தையை முதன்முதலில் உருவாக்கியவர் அமெரிக்க நாட்டின் வானியல் வல்லுநரான ஜார்ஜ் கேமோ என்பவராவார். மேலும் ஹபுல் விதியின்படி இந்த பிரபஞ்சமானது சுமார் 1600 கோடி வருடங்களுக்கு முன்னால் அதிக வெப்பமும் அதிக அடர்த்தியும் கொண்ட ஒரு பந்து போன்ற அமைப்பு வெடித்துச் சிதறியதாகவும் இதன்பின்னால் பிரபஞ்சமானது விரிவடையத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பிரபஞ்சத்தில் தற்போது நாம் காணும் எத்தகைய பொருளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்வதன் காரணமாக அண்டங்கள் யாவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிக் கொண்டே செல்கின்றன.

பிரபஞ்சத்தின் தொடக்கமே இந்த மகா வெடிப்பு என்றால் அது மிகையாகாது. பிக் பேங்க் நிகழ்ச்சிக்குப் பின்னர் இந்த பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்லுகிறது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிரபல விஞ்ஞானி கலிலியோ பதினாறாம் நூற்றாண்டில் பிரபஞ்சத்தை ஆராய்ந்து அதன் விரிவாக்கத்தையும் அதில் காணப்படும் வியக்கத்தக்க பொருட்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT