நாளுக்கு நாள் புதுப்புது முறைகளைப் பயன்படுத்தி நம்முடைய தகவல்களைத் திருடி வருகிறார்கள் இணைய மோசடிக்காரர்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி அப்போது பல செய்திகள் வெளிவந்தாலும், அவர்களின் தந்திர வளையில் சிக்கி பலரும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை.
இணையத்தில் நடந்து வரும் பல மோசடிகளுக்கு மத்தியில் தற்போது புதியதாக கால் பார்வேர்டிங் என்ற மோசடி பரவலாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இந்த மோசடியிலும் குறிப்பிட்ட நபரின் ஓடிபி பயன்படுத்தி வங்கியில் இருந்து பணத்தை திருடும் யுக்திதான். இத்தகைய மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு போன் செய்து, வங்கியில் இருந்து பேசுகிறோம் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்பது போல முதலில் பேசுவார்கள்.
மேலும் நம்முடைய நம்பிக்கையை பெறுவதற்கு எல்லா விதமான தகவல்களையும் வெளிப்படையாகக் கூறுவார்கள். பின்பு நம்முடைய வங்கிக் கணக்கிலோ அல்லது மற்ற சேவைகளிலோ சிறு பிரச்சனை இருப்பதாகக் கூறி, அவர்கள் கொடுக்கும் ஒரு எண்ணுக்கு போன் செய்தால் சரியாகிவிடும் எனச் சொல்வார்கள். நாமும் அவர்கள் கூறுவதை நம்பி அந்த எண்ணுக்கு போன் செய்தால், நம்முடைய எண்ணுக்கு வரும் அழைப்புகள் அனைத்துமே மோசடிக்காரர்களின் எண்ணுக்கு ஃபார்வர்டு ஆகத் தொடங்கிவிடும்.
அதன் பிறகு உங்கள் வங்கி கணக்கை அவர்கள் இணையம் வழியாக ஆக்சஸ் செய்ய முயலும்போது, உங்களுக்கு வரும் ஓடிபி எண் அவர்களின் மொபைலுக்கு பார்வேர்ட் செய்யப்படும். அதைப் பயன்படுத்தி உங்களின் பணத்தை அவர்கள் திருட வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர மேலும் பல வகையான மோசடிகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படை விஷயங்கள் சிலவற்றைப் பின்பற்றினாலே போதும்.
யார் உங்களுக்கு அழைத்து உங்களுடைய தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பேங்க் விவரங்களையோ கேட்டால் அதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய மொபைல் போனுக்கு ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால், ஒருவேளை உங்களுடைய போன் தொலைந்தாலும் மோசடிக்காரர்கள் அதிலிருந்து தகவல்களை எடுப்பது கடினம்.
முக்கியமாக உங்கள் போனுக்கு வரும் ஓடிபி எண்ணை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள். ஏனென்றால் எந்த ஒரு நபரும், நிறுவனமும் உங்களுடைய போனுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கேட்க மாட்டார்கள். மோசடிக்காரர்கள் மட்டுமே ஒடிபி எண் கேட்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.