கடந்த 1998 முதல், ஐஐடி மெட்ராஸில் விண்வெளி பொறியியலில் பேராசிரியராக இருந்து வருபவர் சத்யநாராயணன் சக்கரவர்த்தி. இவர் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் பெரும் ஆர்வம் கொண்டவர். இவர் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான NCCRD என்னும் ஆராய்ச்சி மையத்தை நிறுவி அதன் தலைவராக உள்ளார்.
வாகனத்துறை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் அவசியத்தை உணர்ந்து 2017 ஆம் ஆண்டில் பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனவே இதற்காக தனியாக ePlane என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு 2019ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் இதன் மூலமாக மலிவான விலையில் பறக்கும் சேவைகளை வழங்கி, நகரங்களின் சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அதற்கான வடிவமைப்பின் ஒப்புதலை பெற்றது. மேலும் இந்த நிறுவனம்தான் இந்தியாவிலேயே மின்சார விமானத்திற்கான சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனமாகும்.
சமீபத்தில் பெங்களூருவில் நடந்த யுனிவர்ஸ்டோரியல் டெக் 30 பட்டியலில், இந்தியாவின் நம்பிக்கைக்குறிய 30 இந்திய ஸ்டார்ட் அப்களில் ஒன்றாகவும் இடம் பிடித்தது. மேலும் இந்த நிறுவனத்திற்காக 5 மில்லியனுக்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டுள்ளது. e6 எனப்படும் சிறிய ரக ePlane மூலமாக ஆறு கிலோ எடை வரை சுமந்து செல்ல முடியும். அதேபோல இந்நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ள e50 ட்ரோன் 50 கிலோ வரை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டது. இதற்கான புரோட்டோடைப் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பயணிகளின் பறக்கும் டாக்ஸியான e200-ன் முன்மாதிரியை உருவாக்கி வருவதாக பேராசிரியர் சக்கரவர்த்தி கூறியுள்ளார். வழக்கமான டாக்ஸியை போலவே இதில் ஐந்து இருக்கைகள் இருக்கும் படி உருவாக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.