இன்றைய டிஜிட்டல் உலகில் இணைய மோசடி என்பது மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்திய மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நாளுக்கு நாள் இணையப் பரிவர்த்தனை, இணைய பயன்பாடு போன்றவை அதிகரித்து வரும் நிலையில், பலர் அதில் நடக்கும் மோசடிகளில் சிக்கி வருகின்றனர்.
வீட்டிலிருந்த வேலை, பகுதிநேர வேலை, யூடியூபில் லைக் போட வேண்டும் என்று கூறி, பணத்தாசை காட்டி பல வகையில் மோசடிகள் நடக்கிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் கடந்த சில மாதமாகவே அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாகவும், பணரீதியாகவும் பல இழப்பை சந்திக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்டால் உடனடியாக போலீசுக்கு நேரடியாக சென்று புகார் அளிக்க வேண்டும் அல்லது சைபர் கிரைம் தளத்திற்கு சென்று இணையத்தில் புகார் அளிக்கலாம். ஒருவர் ஏமாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் மட்டுமே போலீசாரால் பணப் பரிவர்த்தனை விவரங்களை உடனடியாக டிராக் செய்ய முடியும்.
இணைய மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் காவல் நிலையம் செல்ல அஞ்சுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் தேசிய சைபர் குற்றங்களை புகாரளிக்கும் தளம் என்று ஒன்றிருப்பது பற்றி தெரிவதில்லை. மேலும் அதுபற்றி உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் 1930 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம்.
சைபர் குற்றம் சார்ந்த புகார்களை இணையத்தில் பதிவு செய்ய https://cybercrime.gov.in என்ற இணைய பக்கத்திற்கு முதலில் செல்லுங்கள்.
அந்த பக்கத்தில் Report Cyber Crime என்பதை கிளிக் செய்தால், அடுத்த பக்கத்தில் அதன் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி படித்து உறுதி செய்யவும்.
பின்னர் 'பிற சைபர் கிரைம் புகார்' என்ற பட்டனை கிளிக் செய்து, அதில் சிட்டிசன் லாகின் என்பதை தேர்வு செய்து, உங்கள் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்யவும்.
பின்னர் உங்கள் செல்போனுக்கு வரும் OTP எண்ணை உள்ளே கொடுத்து, கீழே கொடுக்கப்படும் கேப்சாவை நிரப்பி சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்த பக்கம் திறந்தவுடன் நீங்கள் எதுபோன்ற சைபர் குற்றம் சார்ந்து புகார் தெரிவிக்க விரும்புகிறீர்களோ அதை உள்ளிடவும். அதில் பொதுவான தகவல், பாதிக்கப்பட்டவரின் தகவல், சைபர் கிரைம் தகவல் மற்றும் முன்னோட்டம் என நான்கு பிரிவுகளில் படிவம் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள விவரங்களை நிரப்பவும்.
பின்னர் நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு, சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள். அடுத்ததாக நீங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவத்தின் முழு விபரங்கள் அடங்கிய பக்கத்தில், அச்சம்பவம் குறித்த முக்கியமான கோப்புகள், ஸ்கிரீன்ஷாட் போன்றவற்றை பதிவேற்றம் செய்து நிரப்பியதும், Save பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உங்களை ஏமாற்றிய நபர் சார்ந்த விவரங்களை நிரப்பி, நீங்கள் கொடுத்த தகவல் அனைத்தும் சரிதானா என்று பார்த்த பிறகு, சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டதற்கான மெசேஜ் உங்களுக்கு வரும். அத்துடன் புகாரின் அடையாள எண் மற்றும் இது தொடர்பான இன்னும் சில தகவல்கள் அனைத்தும் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
லாட்டரி மோசடி, ஏடிஎம் மோசடி, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடி, இணைய வங்கி மோசடி என எத்தகைய சைபர் குற்றமாக இருந்தாலும், அது குறித்து புகார் அளிக்கும்போது குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் எல்லாவிதமான ஆதாரங்களையும் இதனோடு சேர்த்து சமர்ப்பித்தால், சைபர் கிரைம் துறைக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.