Time Travel என்கிற கருத்து மனிதனின் ஆதி காலம் முதலே நம்மை கவர்ந்து வரும் ஒரு கற்பனையாகும். பல நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், விஞ்ஞானிகள் இந்த கருத்தை ஆராய்ந்து வருகின்றனர். டைம் டிராவல் என்பது நிகழ்காலத்தில் இருந்து எதிர் காலத்திற்கு அல்லது கடந்த காலத்திற்கு பயணிப்பது. இது ஒரு கற்பனையா? அல்லது விஞ்ஞானத்தினால் எதிர்காலத்தில் சாத்தியப்படுமா? என்பதை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
நேரம் என்றால் என்ன?
நேரம் என்பது ஒரு அடிப்படையான அளவைக் குறிக்கிறது. இது நிகழ்வுகளின் வரிசை மற்றும் அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை அளவிடுகிறது. நாம் பொதுவாக நேரத்தை கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலம், நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலம் என ஒரு நேரியல் வரிசையில் கடந்து செல்வதாகக் கருதுகிறோம். ஆனால், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (Relativity Theory) நேரம் என்பது நாம் பயணிக்கும் வேகம் மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றைப் பொறுத்து மாறக்கூடும் எனக் கூறுகிறது.
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு Vs டைம் டிராவல்:
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு நேரம் மற்றும் இடம் ஆகியவை, ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ள ஒரு தனியான நேரத் தொகுப்பை உருவாக்குகிறது என்று கூறுகிறது. இந்த கோட்பாட்டின்படி ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கு நெருக்கமாக பயணிக்கும்போது, அந்த பொருளை சுற்றி உள்ள நேரம் மெதுவாக செல்லும். இதை ஈர்ப்பு விசையின் விளைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெரிய பொருளின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும்போது அந்த பொருளின் அருகில் உள்ள நேரம் மெதுவாக மாறும்.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது எதிர்காலத்திற்கு நாம் பயணிப்பது சாத்தியப்படுவது போல் தெரிகிறது. ஒரு விண்கலம் ஒளியின் வேகத்திற்கு நெருக்கமாக பயணித்துவிட்டு பூமிக்கு திரும்பினால், விண்கலத்தில் பயணித்தவர்கள் பூமியில் உள்ளவர்களை விட குறைவான நேரத்தை கடந்து இருப்பார்கள். அதாவது அவர்கள் எதிர்காலத்திற்கு பயணித்து இருப்பார்கள்.
கடந்த காலத்திற்கு பயணிப்பது:
கடந்த காலத்திற்கு பயணிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் எதிர்காலத்திற்கு பயணிப்பது சாத்தியம் என்று கூறுகின்றன என்றாலும், கடந்த காலத்திற்கு பயணிப்பது பற்றி எவ்வித உறுதியான தகவலையும் வழங்கவில்லை. கடந்த காலத்திற்கு பயணிப்பது பற்றிய பல முரண்பாட்டுக் கோட்பாடுகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் கடந்த காலத்திற்கு சென்று உங்கள் தாத்தாவை கொன்றுவிட்டால், நீங்கள் பிறக்கவே மாட்டீர்கள். ஆனால், நீங்கள் பிறக்கவில்லை என்றால் உங்கள் தாத்தாவைக் கொல்ல முடியாது. இது ஒரு முடிவில்லாத Loop போல மாறிவிடும்.
வார்ம் ஹோல்ஸ் Vs டைம் டிராவல்
வார்ம் ஹோல்ஸ் என்பது நேரத்தில் உள்ள குறுக்கு வழிகள். இவை இரண்டு வெவ்வேறு இடங்களை இணைக்கின்றன. சில விஞ்ஞானிகள் வார்ம் ஹோல்ஸ் மூலம் கடந்த காலத்திற்கு பயணிக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால், இன்றுவரை வார்ம் ஹோல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை எப்படி உருவாகும் என்பது பற்றிய தகவலும் இல்லை. Interstellar திரைப்படத்தில் வார்ம்ஹோல் வழியாக கடந்த காலத்திற்கு பயணம் மேற்கொள்வதைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, எதிர்காலத்திற்கு பயணிப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது போலத் தெரிந்தாலும் அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது முற்றிலும் கடினம். அதேநேரம், நம்மால் கடந்த காலத்திற்கு பயணிப்பது என்பது சாத்தியமில்லாதது போலவே தோன்றுகிறது. எனவே, காலப்பயணம் சார்ந்த கருத்து என்பது கற்பனையாக மட்டுமே இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.