AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியை 1990களில் இணையத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா ஒப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்ய நாதெல்லா, தன்னுடைய தொழில்நுட்பம் சார்ந்த கருத்தை அங்கு பகிர்ந்துகொண்டார். 1990களில் இணையத்தின் வளர்ச்சி இந்த உலகத்தை எந்த அளவுக்கு மாற்றியதோ அதேபோல தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் இந்த உலகையே புரட்டிப் போடப்போகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் டாட் காம் காலகட்டம் என அழைக்கப்படும் 1995இல், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எழுதிய கடிதத்தில் இருந்த கருத்தையும், தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டிருக்கிறார் சத்ய நாதெல்லா. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பற்றி இவர் பேசுவதற்கு காரணம் இந்தத் துறையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் தங்களின் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் OpenAI நிறுவனம் வெளியிட்டது. அவர்களைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களில் பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி தங்களின் பல புதிய AI கருவிகளை வெளியிட்டுள்ளனர்.
பல AI கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக OpenAI நிறுவனத்தில் சுமார் 13 பில்லியன் டாலர்களுக்கு மேல் மைக்ரோசாப்ட் முதலீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி OpenAI-ன் மேம்படுத்தப்பட்ட GPT-4ஐ, மைக்ரோசாப்டின் BING AI தொழில்நுட்பமும் பயன்படுத்தி வருகிறது.
இப்படி பல நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தில் நம்பிக்கை கொண்டு தங்களின் முதலீடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.