எலிகளை வைத்து செய்யப்பட்ட மனிதர்களின் வயதைக் குறைக்கும் சோதனையானது 70% வெற்றி பெற்றுள்ள நிலையில், இவை ஒருவேளை முழு வெற்றியடைந்தால் முதியவரை கூட இளைஞராக மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் வயதைக் குறைக்கும் சோதனையானது அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம் இந்த சோதனை முதுமையில் உள்ளவரை இளமையாக மாற்றும் சோதனை தான். இதற்கான சோதனையானது முதற்கட்டமாக எலிகள் மீது செய்யப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக செய்யப்பட்டு வரும் இந்த சோதனை இதுவரை கிட்டத்தட்ட 70% வெற்றியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை எதிர்காலத்தில் வெற்றி முழு பெற்றால், 80 வயது முதியவரை கூட 20 வயது இளைஞராக மாற்ற முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களைப் பயன்படுத்தி E5 எனப்படும் வயதை குறைக்கும் சிகிச்சையானது எலிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த முயற்சியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலியின் மரபணுவில் நம்ப முடியாத மாற்றம் ஏற்பட்டு அதன் வயது பாதியாக குறைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பரிசோதனை நாளடைவில் மேலும் மேம்படுத்தப்படும் என்றும், இது மட்டும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டால், மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த பரிசோதனையில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், இதற்கு முறையான அனுமதி வாங்கி மனிதர்கள் மீது பரிசோதனை செய்வதற்கு பல காலம் பிடிக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் மனிதர்களை இளமையாக மாற்றும் இந்த அறிவியல் ஆய்வு உண்மையில் வியக்கும்படியாகதான் உள்ளது. இது மட்டும் சாத்தியமானால், நாம் அனைவருமே எப்போதும் இளமையாக வாழ முடியும்.