பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் மைக்ரோபிளாகிங் தளமான ட்விட்டர் எக்ஸ், மற்றொரு அதிர்ச்சியை பயனர்களுக்கு அளித்துள்ளது. அதாவது இந்நிறுவனம் 'Not A Bot' என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இனி புதிய பயனர்கள் ரீ போஸ்ட், லைக், புக்மார்க் போன்றவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும்.
இந்த புதிய திட்டத்திற்கான சந்தா கட்டணமாக ஒரு வருடத்திற்கு 1 டாலர் என ட்விட்டர் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய திட்டம் முதலில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியுள்ளனர். தானாக இயங்கும் மற்றும் பாட் பயன்படுத்தி தனது கணக்கை இயக்க வைக்கும் சிலரை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த திட்டத்தின்படி ட்விட்டரில் புதிய கணக்கை உருவாக்கும் எல்லா பயனர்களும் இனி ஆண்டுக்கு ஒரு டாலர் செலுத்த வேண்டும். ஒருவரின் பதிவுகளை மறு பதிவு செய்தல், புக் மார்க் செய்தல், லைக் செய்தல் மற்றும் பிறருடைய கணக்குகளைக் குறிப்பிட்டு கருத்து கூற விரும்புபவர்கள் இந்த கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும். ஆனால் ஏற்கனவே உள்ள பயனர்கள் பதிவுகளைப் படிக்கவும், புகைப்படங்கள் வீடியோக்களை பார்க்கவும் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
புதியதாய் இணையும் பயனர்களுக்கே இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்திருந்தாலும், இதற்கான கட்டணம் நாட்டுக்கு நாடு மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது. எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அதில் உள்ள Bots பெரும் சர்ச்சையாக இருந்து வந்த நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய திட்டத்தை ட்விட்டர் எக்ஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.