Tonga Island 
ஸ்பெஷல்

பழையது அழிந்தால் புதியது ஒன்று உருவாகிதானே ஆகணும்? 'தோங்கா தீவு' தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

புதிய நிலங்கள் பூமியில் இப்பொழுது உருவாகி இருக்கிறதா? பூமி என்று பார்க்கும் பொழுது பூமி ஒன்று தான் என்றும், அது ஒரு முறை உருவாக்கப்பட்டது அப்படியே தான் இருக்கிறது என்றும், புதிதாக பூமியில் எதுவும் தோன்றவில்லை என்றும், நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பூமியில் பல இடங்கள் அழிவுற்றதாக, கடலுக்குள் சென்று விட்டதாக படித்திருக்கிறோம். அவை என்ன ஆகின? புதிய நிலங்கள் ஏதாவது தோன்றுகிறதா? பழையது அழிந்தால் புதியது ஒன்று உருவாகிதானே ஆக வேண்டும்? இப்படி எல்லாம் நமக்குள ஒரு கற்பனை சிறகடித்து பறப்பதுண்டு. அது கூறும் உண்மை என்ன என்பதை இப்பதிவில் காண்போம். 

மெஹலன் கண்டுபிடித்த பசிபிக் பெருங்கடலின் தீவுக் கூட்டங்களுக்குப் பெயர் பிஜி தீவுகள் என்பது. அட்லஸில் மிகச்சிறு புள்ளிகளாக தெரியும் ஒரு தீவுக்குப் பெயர் 'தோங்கா தீவு' என்பது. நியூசிலாந்துக்கு மேற்கு பகுதியில் உள்ள பிஜி தீவுகளுக்கு கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிற தீவுக் கூட்டத்திற்குப் பெயர் தான் 'தோங்கா தீவுகள்' என்பது. இந்த தீவுக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 170 தீவுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தோங்கா தீவில் வாழும் தொல் மக்கள் இந்த தீவு எப்படி உண்டானது என்பதற்கு கூறும் கதை என்னவென்றால்...

'தாங்கலோ' என்கிற ஒரு கடவுள் பசியோடு இருந்தார். அப்பொழுது வானத்திலிருந்து கடலில் மீன் பிடிக்க தூண்டில் போட்டார். தூண்டிலில் மீன் மாட்டி விட்டது என்று நினைத்து தூண்டிலை பிடித்து இழுத்திருக்கிறார். தூண்டில் மிகவும் பாரமாக இருந்த காரணத்தால் தன்னுடைய முழு பலத்தோடும் அதை இழுத்த போது நீருக்கு வெளியில் தூண்டில் வந்த பிறகுதான் தூண்டிலில் அகப்பட்டது மீன் அல்ல, பெரிய பாறை என்பது தெரிய வந்திருக்கிறது. அதுவும், அகப்பட்டது நீண்ட பாறைத் தொடர். அவர் தூண்டிலை இன்னும் மேலே எடுக்க எடுக்க, அந்த பாறைத் தொடர் உடைந்து பல துண்டுகளாக கடலில் விழுந்திருக்கிறது. அப்படி விழுந்த துண்டு பாறைகள் தான் 'தோங்க தீவுகள்'. இப்படி அவர்களின் நம்பிக்கையை ,அவர்களின் மதி நுட்பத்தை தெளிவுபடுத்தும் சுவாரஸ்யம் மிக்க கதை இது.

ந்த தோங்கா தீவுகள் பூமியின் இரு புவி ஓடுகள் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. 'பசிபிக்' ஓடும் 'இந்தோ ஆஸ்திரேலியா' ஓடும் சந்தித்துக் கொள்ளும் இடத்தின் அருகில் இது இருக்கிறது. புவி ஓடுகள் ஒன்றுக்கொன்று சந்திக்கும் பொழுது அவை ஒன்றை விட்டு ஒன்று விலகி போவதோ, ஒன்றின் கீழ் ஒன்று புதைவதோ, ஒன்றை ஒன்று உறைந்து கொள்வதோ நடக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதுபோல் ஏதோ ஒன்று  நடந்த பொழுது தோங்காத் தீவில் பசுபிக் ஓடானது இந்தோ ஆஸ்திரேலியா ஓட்டுக்கு கீழ் புதைந்து கொண்டே இருந்திருக்கிறது. அப்பொழுது ஆஸ்திரேலியா ஓடு புடைத்து எரிமலையாக வெடித்து, பாறை குழம்புகளை வெளியேற்றி இருக்கிறது. இதன் மூலமாக பழைய நிலப்பரப்புகள் அழிந்து புதிய நிலப்பரப்புகள் உருவாகி இருக்கின்றன. இப்படி பசிபிக் கோடு புதையும் அந்த இடம் பெரிய பள்ளத்தையும் உருவாக்கியிருக்கிறது. 'தோங்கா ட்ரென்ச்' என்கிற இந்த ஆழி, உலகின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்றாகும்.

இப்படியாக ஓர் ஓடு இன்னொரு ஓட்டோடு கடலுக்கு அடியில் புதையும் பொழுது அந்த இரண்டு ஓடுகளுக்கு இடையில் பெரிய ஆழி உருவாகிறது. புதைந்த ஓட்டின் அழுத்தத்தால் மற்ற ஓட்டின் மேற்பரப்பு புடைத்து மலையாகவும், எரிமலையாகவும் மாறுகிறது. இவை மாறி மாறி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் புதிய நிலப்பரப்புகள் உருவாகின்றன. எனவே நிலங்கள் இன்றும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு சக்தியால் நிலங்கள் உருவாக்கப்பட்டன, என நம்பி கொண்டிருப்பதை விட, இன்றும் புதிய நிலங்கள் உருவாகின்றன, அழிகின்றன என்பதற்கு தோங்கா தீவுகளே சிறந்த உதாரணம். இந்தப் பூமியின் செயல் இயக்கம் இன்று எப்படி, எந்த அளவில் நடந்து கொண்டிருக்கிறதோ அதே அளவில் பல கோடி ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது என்கிறது ஆராய்ச்சி.

'ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல் 'தோங்கா தீவு'களே பூமியின் புதிய அவதாரத்துக்கு எடுத்துக்காட்டு.

நன்றி: நிலமும் பொழுதும்

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT