ஸ்பெஷல்

ஆரெம்கேவியின் 'மறுமலர்ச்சி' பட்டுப்புடவைகள்!

பிரத்யேக சிறப்புக் கட்டுரை

கார்த்திகா வாசுதேவன்

பாரம்பரிய பட்டுப்புடவைகளின் பெருமையை தலைமுறைகள் தாண்டியும் மக்கள் மனதில் நிலைபெறச் செய்வதில் தனித்துவம் மிக்கது ஆர்எம்கேவி (RmKV) நிறுவனம். கைத்தறிப் பட்டுப் புடவைகளில் புதுமைகளைப் புகுத்தி பெண்களில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளச் செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!

1924 ஆம் ஆண்டு முதலே காஞ்சிபுரம் கைத்தறிப் பட்டுப்புடவைகளின் உலகில் நீடித்த புகழ் கொண்ட நிறுவனங்களில் பிரதானமான ஒன்றாக விளங்கி வருகிறது ஆரெம்கேவி. கைத்தறிப் பட்டில் அவர்களின் கண்டுபிடிப்பு மற்றும் கைவினைத்திறனுக்காக இதுவரை பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.

ஹம்ஸதமயந்தி, ஐஸ்வர்யப் பூக்கள், கிருஷ்ண தர்பார், குறள் ஓவியம் பட்டுப்புடவைகள் போன்ற எண்ணற்ற இன்றியமையாத பட்டுப்புடவைகளின் வரிசையை ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ உருவாக்கியுள்ளது. கிராண்ட் ரிவர்சிபிள் பட்டுப்புடவை, 50000 வண்ணப் பட்டுப்புடவை, வர்ணஜாலம் பட்டுப்புடவை, நேச்சுரல் பட்டுப்புடவை சேகரிப்புகளும் இதில் அடங்கும்.

கூடுதலாகத் தனது புதுமையான லினோ-லைட் பட்டுப்புடவை வரம்பையும் வழங்குகிறது ஆரெம்கேவி. அதுமட்டுமல்ல வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு உகந்த வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட வண்ணங்களில் உங்கள் சொந்தப் புடவையை வடிவமைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இவை தவிர, புத்தம் புதிதாக 'ஆரெம்கேவி மறுமலர்ச்சி பட்டுப்புடவைகள்' என்ற தொகுப்பு ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று தி.நகர் ஆரெம்கேவி வளாகத்தில் நிகழ்ந்தது.

மறுமலர்ச்சி என்பது நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் தேவைப்படுகிறது. ஆனால், அதை தான் சற்றுக் கடினமான காரியம், ஏனெனில் இதில் மெனக்கெடல் மிக அவசியமாகிறது இல்லையா? அந்த மெனக்கெடலையும், சிறப்பானதொரு கவனத்தையும், கடின உழைப்பையும் புத்துணர்ச்சி மிகுந்த சிந்தனையையும் செலவழித்தால் மட்டுமே எந்த ஒரு விஷயத்திலும் மறுமலர்ச்சியைக் கொண்டு வரமுடியும். நேற்று ஆரெம்கேவி அறிமுகப்படுத்திய அதன் புத்தம் புதிய மறுமலர்ச்சி பட்டுப் புடவைகளின் தொகுப்பில் இந்த குணாதிசயங்கள் அனைத்துமே மிக அருமையாக வெளிப்பட்டிருந்தது.

இந்த தொகுப்பில் உள்ள புடவைகளை அறிமுகப்படுத்தும் போது ஆர்ரெம்கேவி நிறுவனத்தார் குறிப்பிட்ட முக்கியமான விஷயம்:

“இது முழுக்க முழுக்க நேச்சுரல் டை கொண்டு அதாவது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சாயங்களைக் கொண்டு மட்டுமே தயாராகி, தேர்ந்த நெசவாளர்களின் கைகளால் இழை இழையாக மிக ரசனையுடன் நெசவு செய்யப்பட்ட புடவைகள். அதுமட்டுமல்ல இந்த மறுமலர்ச்சி பட்டுப்புடவைகளில் ஒன்றை நெசவு செய்ய குறைந்தது 15 நாட்கள் தேவைப்படும். ஏனெனில் அத்தனை செய்நேர்த்தி இருக்கிறது அவை ஒவ்வொன்றிலும்.”

பொதுவாக நமது தென்னகத்து பட்டுப்புடவைகளில் விரவிக்கிடக்கும் மோட்டிஃப் டிசைன்கள், முந்தானை வேலைப்பாடுகள், புடவையின் உடல் பகுதியில் செய்யப்படும் ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளுக்கான மாதிரிகள் நமது பண்டைய கோயில்சிற்பங்கள், காலத்தால் அழியாப் புகழ் கொண்ட பழம்பெருமை மிக்க தைல ஓவியங்கள், அன்றைய பெருமை மிகு ராஜகுடும்பங்கள் அணிந்திருந்த நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை அணிகலன்களில் இருந்தே பெறப்பட்டவை என்பது வரலாறு.

மல்லிகை மொக்கு, தாமரை இதழ்கள், பாய்ப்பின்னல், மழைத்துளி, தேன்கூடு, தாழம்பூ, வெண்டைக்காய், மாங்காய், யாளி உருவங்கள், தோகை விரித்த மயில், அன்னம், துதிக்கை கோர்த்திருக்கும் யானைகள், பவுன் காசு டிசைன்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த கோயில் கற்றூண் சிற்பங்கள் கணித வடிவங்கள் இப்படி எண்ணற்ற டிசைன்கள் பட்டுப்புடவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை அத்தனையையும் கலைநயத்துடன் கை நெசவில் கொண்டு வருவது என்பது மிகுந்த கவனத்தைக் கோரும் கலைப்பணி. அர்ப்பணிப்பு!

ஆரெம்கேவி மறுமலர்ச்சி தொகுப்பில் அவர்கள் மொத்தம் 8 விதமான புடவைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1. கோடாலிக் கருப்பூர் கைத்தறிப் பட்டுப் புடவை.

2. பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்கரி வொர்க் புடவை.

3. உப்படா கிளிச்சித்திரப் புடவை.

4. இயற்கைச் வண்ணம் கொண்ட 2000 புட்டா கைத்தறிப் பட்டுப் புடவை.

5. உடல்பேட்டு பேல்தான் பட்டுப்புடவை.

6. பவுன் புட்டா புடவை.

7. கந்த பெருண்டா பட்டுப்புடவை.

8. கமலம் பட்டுப் புடவை.

இந்த 8 விதமான பட்டுப்புடவைகளிலுமே வண்ணமூட்ட இயற்கைச் சாயம் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.

அத்துடன் இதில் எதுவுமே பவர்லூம் நெசவு கிடையாது. அனைத்தும் கைத்தறி நெசவு மட்டுமே!

அதனால் தான் ஒவ்வொரு தொகுப்பிலும் அதனதன் ஒரிஜினாலிட்டியைக் கொண்டு வர முடிந்தது என்கிறார்கள்.

கோடாலி கருப்பூர் கைத்தறிப் பட்டுப் புடவைகள்...

18 ஆம் நூற்றாண்டில் தஞ்சை அரச குடும்பத்தார் மட்டுமே பயன்படுத்திய டிசைன்களாம் இவை. அந்தக் காலத்தில் அசல் கோடாலிகருப்பூர் புடவைகள் பருத்தியில் தான் நெய்யப்படும், அதில் இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி புடவையில் இடம்பெறும் பார்டர் டிசைன்களுக்கு வண்ணம் தீட்டுவார்களாம். ஆனால் ஆரெம்கேவி அதைப் பட்டில் முயற்சி செய்திருக்கிறது. தூய மல்பெரி பட்டுத்துணியில் வெற்றிலை கொண்டு பச்சை நிறச் சாயமேற்றி இந்தப்புடவைகளை நெய்திருக்கிறார்கள். புடவைகளின் உடல்பகுதி முழுவதும் வெள்ளி ஜரிகை இழை கொண்டு நெய்த வெற்றிலை டிசைன்கள் இடம்பெற்றுள்ளன. பார்டர் மற்றும் முந்தானைப் பகுதியில் நறுக்கிய வெண்டைக்காய் முத்திரைகளையும், வெண்டைச் செடியையும் அசல் ஜரி கொண்டு நெய்திருக்கிறார்கள். பார்டர் மற்றும் முந்தானையில் அரக்கு வண்ணமேற்ற மாதுளம்பழச்சாறு, மரப்பட்டைகளில் இருந்து பெறப்பட்ட சாறு போன்றவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கைத்தறிப்பட்டு என்பதால் புடவையின் விலை ரூ.80,000 ல் இருந்து துவங்குகிறது.

உடல்பேட்டு பேல்தார் புடவை...

செவ்வல்லிக் கொடியும் மரப்பிசினும் கலந்த செங்காவி வண்ணத்தில் தூய ஜரிகையும், பச்சை வண்ணமும் கொண்ட கிரிம்சன் கோடுகளோடு அழகுற மிளிரும் இந்தப் புடவையில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் ஜரி தான் ஸ்பெஷல். பொதுவாக பட்டுப்புடவைகளில் உடல்பகுதி தனியாகவும் , ஜரிகை பார்டர் தனியாகவும் தெரியுமில்லையா? இந்தப்புடவையில் ஜரிகை டிசைனையே உடல்முழுவதுமாக அசல் ஜரிகையில் நெய்திருக்கிறார்கள். குழல்

விளக்கு வெளிச்சத்தில் ஒளியை வாறி இறைத்து புடவை தகதகவென மின்னுகிறது. உடல் முழுதுமே பார்டர் என்பதால் பார்டர் பகுதியை நெய்வதற்கு கெட்டியான பாய்ப்பின்னல் டிசைன் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது தங்கத்தையே குழைத்தெடுத்து பார்டரில் பூசினாற் போல் மினுங்குகிறது. இந்தத் தொகுப்பில் வித்தியாசமான புடவை இது. காலத்தாற் பழமையான டிசைன்கள் கொண்ட இந்தப்புடவையின் ஒரிஜினல் வெர்சன் டெல்லி மியூசியத்தில் இருக்கிறது என்றார்கள்.

புடவையின் விலை ரூ.95000 முதல் ரூ96000 வரை.

பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்கரி வொர்க் புடவை...

பைத்தானி பட்டு நெசவு மகாராஷ்டிரத்துக்குச் சொந்தமானது. 18 ஆம் நூற்றாண்டில் அங்கிருந்த மராட்டிய அரச குடும்பத்துப் பெண்கள் விழாக்காலங்களில் அணிந்த பட்டுப்புடவைகள் பைத்தானி பட்டுக்கள் எனப்பட்டன. பைத்தானி நெசவு முறையின் சிறப்பம்சம் அதில் நெசவு செய்யப்படும் மோட்டிஃப்கள் மற்றும் ஜரி வேலைப்பாடுகள் புடவையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலுமே ஒரே வித தோற்றம் தரக்கூடியவையாக செய்நேர்த்தி கண்ணைப் பறிக்கும். இதனால் இவ்வகைப் புடவைகளை உடுத்தும் போது ஜரிகை உறுத்தலின்றி நீண்ட நேரம் அணிந்து கொள்ளத் தகுந்த மென்மையும், இதமும் நமக்குக் கிடைத்து விடும். பொதுவில் நமது காஞ்சிப் பட்டைக் காட்டிலும் பைத்தானி பட்டுக்கள் மிக விலை உயர்ந்தவை. காரணம் அவற்றின் நெசவு முறையும் ஜரி வேலைப்பாடும் தான். அதிலும் மீனாக்கரி திரெட் வொர்க் வேலைப்பாடு மொத்தமும் கையால் மட்டுமே செய்யப்படும் என்பதால் இந்தப் புடவைகளுக்கான ஆரம்ப விலையே ரூ.70,000 லிருந்து தான் தொடங்குகிறது.

ஆரெம்கேவி அறிமுகப்படுத்திய மறுமலர்ச்சி பட்டுப்புடவைகள் தொகுப்பில் இவ்வகைப் புடவைகளில் பைத்தானி முறையில் நெசவு செய்யப்பட்ட முந்தானையும், மீனாக்கரி வேலைப்பாடமைந்த டிஷ்யூ உடல் பகுதியும் கண்களைப் பறிக்கின்றன.

உப்படா கிளிச்சித்திரப் புடவை...

இவ்வகைப்புடவைகள் மரப்பிசினில் இருந்து எடுக்கப்பட்ட கருஞ்சிவப்பு இயற்கை வண்ணத்தில் பாரம்பரியமிக்க கிளி வடிவங்களோடு உப்படா அதாவது ஜம்தானி முறையில் நெய்யப்படுகின்றன. இதில் இரண்டு விதமான புடவைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பார்டர் மற்றும் முந்தானையில் மட்டும் கிளிகளோடு ஒரு விதமான டிசைன். மற்றொரு புடவை திருமண வைபவங்களில் உடுத்த மணப்பெண்ணுக்காக பிரத்யேகமாக உடல் முழுதும் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுடன் மினியேச்சர் கிளிகள் மின்ன பார்டர் முழுதும் இரட்டைக்கிளிகள் பொன்னிழைகளில் நெய்யப்பட்டு இரு முந்தானை ஓரத்திலும் தகதகவென கிளிகள் பளிச்சிட விளக்கொளியை ஜரிகையில் பிரதிபலித்து கண்களைக் குளிர்விக்கிறது இப்பட்டுப்புடவை.

இதில் அதிக ஜரி பயன்படுத்தப்படாத புடவையின் விலை ரூ.38,000 என்கிறார்கள். முழுவதும் பொன் ஜரிகையால் இழைத்த புடவையின் விலை லட்சத்திற்கு குறையாத விலையில் அலங்கரித்தது.

இயற்கை வண்ண 2000 புட்டா புடவை...

இந்தப் புடவையை அறிமுகப்படுத்தும் போது தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலின் வரலாற்று அடையாளங்களில் இருந்து இதை மீட்டுருவாக்கம் செய்திருப்பதாகச் சொன்னார்கள். உடல் பகுதி முழுவதும் 2000 பூக்கள் மிளிரும் காட்சியை இண்டிகோ இயற்கை வண்ணமேற்றி இந்தக்கால யுவதிகளும் கட்டிக் கொள்ள சிரமப்படாத வகையில் பிற பட்டுப்புடவைகளுடன் ஒப்பிடுகையில் பாதிக்குப் பாதி எடை குறைவான வசதியுடன் காஞ்சிப்பட்டு நெசவில் தந்திருக்கிறார்கள். ஆக, இதை உடுத்தும் போது புடவை கனக்கிறதே என்று சிரமப்படத் தேவை இல்லை. புடவையைத் தொட்டுப் பார்க்கையில் சாஃப்ட் சில்க்கின் இதமும் லைட் வெயிட் ஃபீலும் கிடைக்கிறது. அத்துடன் இந்தப் புடவையை எடுத்து கையால் நீவி மடிப்பு வைக்கத் தொடங்கினால் நமக்கு வேலையின்றி ஃப்ளீட்கள் லகுவாக விழுகின்றன. இதற்காக லினோ வீவிங் என்றொரு புதிய நெசவு முறையைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்று இத்தகைய புடவைகளை உருவாக்கி வருவதாகக் கூறினார்கள். கருநீல வண்ணத்தில் 2000 பொன் மலர்களுடன் காட்சிப்ப்படுத்தப்பட்ட இந்தப் புடவை இந்த தலைமுறை பெண்களை அதிகமும் ஈர்க்கக்கூடும்.

விலை ரூ83,000 என்கிறார்கள்.

பவுன் புட்டா புடவை...

இப்புடவை பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானை கொண்டது. அதில் மீனாக்கரி வேலைப்பாடமைந்த மெல்லிய கருஞ்சிவப்பு இயற்கை வண்ணம் கொண்டு சாயமேற்றப்பட்டு அசலான ஆயிரம் ஜரிகைப் புட்டாக்கள் மின்னுகின்றன. 18 ஆம் நூற்றாண்டில் மராட்டிய அரசகுலத்துப் பெண்கள் மட்டுமே பயன்படுத்திய இந்தப் புடவை இப்போது மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

புடவையின் விலை ரூ 68,000 முதல் ரூ.78000 வரை...

கண்ட பேரண்ட கைத்தறிப் பட்டுப்புடவை...

மைசூர் அரண்மனையின் நுட்பமான கலை நுணுக்கங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட கைத்தறிப் பட்டுப்புடவை இது. புராண இதிகாசங்களில் இடம்பெறும் கந்தபெருண்டா உருவகம் இதன் ஜரி வேலைப்பாட்டில் புகுத்தப்பட்டிருக்கிறது. கண்டபேருண்டம் என்பது நரசிம்மருக்கும், சரபருக்கும் இடையே நடந்த உக்கிரச் சண்டையின் போது நரசிம்மர் எடுத்த வினோதமான பறவை வடிவம் என்கிறது புராணம். புராண அடிப்படையில் இந்தப் பறவை மிகப் பிரமாண்ட உருவம் கொண்டது மட்டுமல்ல இரட்டைத் தலையுடனும் வலுவான யானைகளையே கூட தம் அலகில் கவ்வி எம்பும் அளவுக்கு வல்லமை கொண்டதாகவும் பழஞ்சித்திரங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விநோதப் பறவை இன்றும் கூட கர்நாடக மாநில அரச லட்சிணைகளில் ஒன்றாகப் பயன்படுத்தப் படுவதாகத் தகவல். தமிழகத்தில் மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி 18 நாள் பிரம்மோற்சவத்திருவிழா நாட்களில் 6 ஆம் திருவிழா அன்று ராஜகோபால ஸ்வாமி கண்டபேரண்ட பட்சி வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். பகவான் கிருஷ்ணருக்கு இத்தகைய வினோத வாகனம் இங்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். புராணக் கதைகளில் இடம்பெற்ற இந்த விநோதப் பறவை உருவத்தை ஜரிகையில் இழைப்பதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு தேவைப்பட்டிருக்கலாம். அது புடைவையில் நேர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது.

புடவையின் விலை 69,950

கமலம் கைத்தறிப் பட்டுப் புடவை...

கமலம் என்றால் தாமரை தான் இல்லையா? இந்தத் தாமரை வடிவத்தை நம்மை விட முகலாயர்கள் அதிகமும் கலைநுணுக்கத்துடன் தங்களது கட்டிட வேலைப்பாடுகள், சித்திரங்கள் என அனைத்திலுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தப்புடவையும் கூட தாஜ்மஹாலில் காணப்படக்கூடிய கலைநுணுக்கங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகவே கூறுகிறார்கள். இதற்கு இயற்கை வண்ணமேற்ற ஜப்பான் மரப்பட்டையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பீச் நிறத்தில் கோல்டன் மோட்டிஃப் ஜரி வேலைப்பாடுகள் நிறைந்த இந்தப் புடவை ஆரெம்கேவியின் தலைசிறந்த நெசவாளர்களின் கைத்திறனுக்கு மிகச்சிறந்த சான்றாக இந்த விழாக்காலத்தில் மணப்பெண்களை அலங்கரிக்கவிருக்கின்றன.

புடவையின் விலை 60,000 லிருந்து துவங்குகிறது.

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

SCROLL FOR NEXT