42 வயதான பிரக்யான் சக்மா அவர் வாழும் பகுதியில் கொஞ்சம் வித்தியாசமான மனிதராகத்தான் தெரிகிறார். ஏனெனில் ஒரு ஓவியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பிரக்யான் கோவிட்19 பெருந்தொற்றுக் காலத்தின் பின் ஒரு தோட்டக்கலை ஆர்வலராகவும், தொழில்முனைவோராகவும் மாறிவிட்டார். அப்படி மாறிய பின்னர் இப்போது உலகின் விலையுயர்ந்த மாம்பழமான மியாசாகி மாம்பழத்தை திரிபுராவில் வெற்றிகரமாக வளர்த்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக அதே மாம்பழ வகையை அவர் பயிர் செய்த போது தற்போது அவரது பழத்தோட்டமானது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மியாசாகி மாம்பழங்கள், பழுத்தவுடன் அவை கொள்ளும் தீக்கொளுந்து போன்ற சிவப்பு நிறத்தால் தனித்த அடையாளம் பெறுகின்றன, இவ்வகை மாம்பழங்கள் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
"நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மியாசாகி மாம்பழங்களை வளர்க்கத் தொடங்கினேன், இப்போது நான் மியாசாகி மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன," என்று கூறும் பிரக்யன், தற்போது தன்னிடமிருக்கும் 4 ஏக்கர் பழத்தோட்டத்தில் ரம்புட்டான், டிராகன் பழம் மற்றும் ஆப்பிள் பர் உள்ளிட்ட பழங்கள் மற்றும் மியாசாகி, காதிமோன், அமெரிக்கன் பால்மர், ரங்குய், அம்ரபாலி போன்ற பலவகையான மாம்பழங்களுடன் கண்களுக்கு குளிர்ச்சியாக ஒரு கலவையான பழத்தோட்டத்தை நடத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் இவரது பழத்தோட்டத்தில் பயிரிடப்பட்ட மியாசாகி மாம்பழங்கள் தோட்டக்கலைத் துறையால் பரிசோதிக்கப்படாததாலும், புவியியல் குறியீடு (ஜிஐ) இல்லாததாலும், பிரக்யான் அவற்றை கந்தசேராவில் உள்ள உள்ளூர் சந்தையில் கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்து வந்திருக்கிறார். இப்படி கடந்த ஆண்டு தனது பகுதியில் சுமார் 20 கிலோ மியாசாகி மாம்பழங்களை விற்றதாக அவர் கூறுகிறார். தற்போது தனது பழத்தோட்டத்தில் ஒரு சில மியாசாகி மரங்கள் மட்டுமே இருப்பதால், பிரக்யான் இப்போது இந்த அயல்நாட்டு மாம்பழ வகையியிலிருந்து சுமார் 40 கிலோ அறுவடையை மட்டுமே எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார்.
“மியாசாகி மாம்பழங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அவர்களிடம் இப்போது ஒரு சில மியாசாகி செடிகள் மட்டுமே இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க இன்னும் சிறிது காலம் ஆகலாம். ஆனால் நாங்கள் அவர்களுக்கு கால்வாய் அமைத்துக் கொடுப்பதன் மூலம் எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம், மியாசாகி மாம்பழ் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான தொழில்நுட்ப அறிவையும் அவர்களுக்கு வழங்கியுள்ளோம், ”என்று தலாய் மாவட்ட விவசாய மேற்பார்வையாளர் சி கே ரியாங் கூறினார்.
கலைஞராக இருந்து விவசாயியாக மாறிய பிரக்யானின் பயணம் எளிதான ஒன்றல்ல. அகர்தலாவில் இருந்து சுமார் 82 கிமீ தொலைவில் உள்ள திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் (TTAADC) அதிகார வரம்பில் உள்ள பஞ்சரதன் என்ற சிறிய கிராமத்தில் பிரக்யன் ஒரு ஓவியர். ஓவிய ஆசிரியராகவும் இருந்தார். அத்துடன் கோவிட்-19 தொற்றுநோய் காலம் வரை தனது திறமையின் அடிப்படையில் சொந்தக் கிராமத்தில், சுனில் லால் லலித் கலா அகாடமி எனும் பெயரில் ஒரு கலைப் பள்ளியையும் நடத்தி வந்தார்.
அச்சமயத்தில் ஒருமுறை வங்காளத்தில் இருக்கும் ஒரு நண்பரை சந்திக்கச் சென்றபோது, அங்கு அவருடைய பண்ணையில், பிரக்யான் ஒரு சில "பரோமாஷி (ஆண்டு முழுவதும் பலன் தரும்)" மா மரங்களைக் கண்டார். அந்த மாமரக்கன்றுகள் அவரை வெகுவாக ஈர்க்கவே அவற்றை கொண்டு வந்து தன்னுடைய பழத்தோட்டத்தில் நட்டு வளர்க்கத் தொடங்கினார்.
ஒரு விஷயத்தை தொடங்கிய பிறகுதான் அதிலிருக்கும் செலவினங்கள் ஒவ்வொன்றாக நமக்குத் தெரியவரும். பிரக்யானின் பழத்தோட்டமும் அப்படித்தான் அவருக்கு நிறைய செலவுகளைக் கொண்டு வந்தது. செலவுகளை ஈடுகட்ட பிரக்யான் தனது ஓவியப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். கலைப் பள்ளியிலிருந்து வரக்கூடிய கொஞ்சம் பணம், மேலும் தனிப்பட சில கைவினைபொருட்கள் செய்து கொடுத்து ஈட்டும் பணம், என அனைத்தையுமே தனது பழத்தோட்டத்தில் தான் பிரக்யான் முதலீடு செய்திருக்கிறார். சில சமயங்களில், செலவுகள் கழுத்தைத் தாண்டி உச்சந்தலை வரை ஏறி அடுத்த நாள் சாப்பாட்டுச் செலவுக்கு என்ன செய்வது எனும் அளவுக்கு எங்களைத் திணற வைத்து விடும். அந்த அளவுக்கு பழத்தோட்ட வேலைகளுக்கான செலவுகள் கட்டுக்கடங்காமல் போனதுண்டு.ஆனால் இவை அனைத்திலும் என் மனைவி என்னை ஆதரித்தார், ”என்கிறார் பிரக்யான்.
அப்போது அரசாங்கத்தின் எந்த ஆதரவும் இல்லாமல், மியாசாகி மாம்பழங்களைப் பற்றி அறியவும், தனது பகுதியில் யாரும் கேள்விப்படாத ஒரு செடியை வளர்ப்பது பற்றிய அறிவைப் பெறவும் யூடியூப் மற்றும் இணையத்தையே தான் அதிகம் சார்ந்திருந்ததாக கூறும் பிரக்யான் முதலில் அரசாங்கத்திடம் உதவிக்கு விண்ணப்பிக்கவில்லை, அவர்களும் உதவவில்லை. ஆனால் இப்போது இவரது பண்ணை கொஞ்சம் கவனத்தை ஈர்த்து வருவதால், அரசாங்கத்திடம் இருந்து சில உதவிகளைப் பெற முடியும் என நம்புகிறார்.
முதன்முதலில் உலகின் விலை உயர்ந்த மியாசாகி மாம்பழ வகையை பயிரிட வேண்டும் என்று எண்ணிய போது அவர் ஆன்லைனில் இருந்து தான் சில மியாசாகி மாங்கன்றுகளை ஆர்டர் செய்து பெற்றிருக் கிறார். அப்போது அவற்றை வளர்த்தெடுக்க உள்ளூர் தாகுராச்சேரா ஓடையில் இருந்து பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி இருக்கிறார். முதன்முதலில் அறுவடையான அவரது முதல் மியாசாகி மாம்பழங்கள் விற்கப்பட்ட ஒரு வருடம் கழித்து, உள்ளூர் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை விழித்துக் கொண்டு பிரக்யானின் முயற்சியை கவனிக்கத் தொடங்கியது. அதன் பலன், தற்போது அவரது பழத்தோட்டத்திற்காக அதிகாரிகள் கால்வாய் தோண்டியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அறுவடை செய்யப்படும், பிரக்யானின் மியாசாகி மாம்பழங்கள் இந்த ஆண்டு ஸ்டாண்டுகளைத் தாக்கியுள்ளன. தலாய் மியாசாகி தோட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், திரிபுராவின் மண் நிலை மற்றும் காலநிலை 'சூரியனின் முட்டை' எனப் பட்டப் பெயரிட்டு அழைக்கப்படும் மியாசாகி மாம்பழ சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானது என்று ரியாங் கூறுகிறார்.
திரிபுராவில் இதுவரை காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு சிலிகுரியில் நடந்த மூன்று நாள் மாம்பழத் திருவிழாவின் ஏழாவது நாள் கண்காட்சியில் பிரக்யானின் மியாசாகி மாம்பழம் காட்சிப் படுத்தப்பட்டது.
அவற்றின் பிரகாசமான நிறங்கள் மற்றும் சரியான முட்டை போன்ற வடிவத்திற்காக 'சூரியனின் முட்டை' என்று அழைக்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் ஜப்பான் நாட்டின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள். அதன் வரலாறு 1980 களிலிருந்து தொடங்குகிறது.
மியாசாகி மாம்பழங்களை இந்தியாவில் வெற்றிகரமாகப் பயிரிடுவதில் பிரக்யான் அடைந்த வெற்றி, மாநிலத்தில் உள்ள பல தோட்டக்கலை நிபுணர்களையும் அவரைப் பின்பற்றி மியாசாகி மாம்பழ சாகுபடியைச் செய்யத் தூண்டியது, ஆனாலும் அவர்களில் யாரும் பிரக்யானைப் போன்ற விளைச்சலைக் கொண்டு வரவில்லை என்று ரியாங் கூறினார்.
ரியாங் இப்போது திரிபுராவில் மியாசாகி மாம்பழங்களின் சாகுபடியை அதிகரிப்பதற்காகத் திட்டமிடுகிறார். வெகு விரைவில் அரசாங்கத்தின் முன் முழு அளவிலான திட்டத்தை முன்வைக்கவிருப்பதாகவும், அவர் கூறுகிறார்.
ஒரு மூத்த தோட்டக்கலை நிபுணர் கூறுகையில், முறையான தொழில்நுட்ப பயிற்சி அமர்வுகள் மற்றும் திரிபுரா மார்க்ஃபெட் (மார்க்கெட்டிங் ஃபெடரேஷன்) மூலம் முறையான சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை காலத்தின் தேவையாகும். அவற்றை மிகச்சரியான முறையில் செய்தால் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் உலகின் மிக விலை உயர்ந்த மியாசாகி மாம்பழங்களை அதிக அளவில் ஆண்டுதோறும் அறுவடை செய்ய முடியும் என்கிறார்.
மியாசாகி வகை மாம்பழங்களில் 17% சர்க்கரை மூலக்கூறுகள் இருப்பதால் உலகின் அதிசுவையான மாம்பழமாக இது நீடிக்கிறது. அத்துடன் இதன் ஒரு மாம்பழத்தின் எடையே 350 கிராமுக்கு மேல் இருக்கும். இதன் இன்றைய மார்க்கெட் விலை கிலோவுக்கு 3 லட்சத்தை எட்டி விட்டது என்கிறார்கள்.
அதெல்லாம் சரி தான். இவ்வளவு விலை உயர்ந்த மாம்பழத்தை நம்மூரில் விளைய வைத்து வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டுமென்றால் அதிகக்கூலி கொடுத்து திடமான காவலர்களையும் நியமிக்க வேண்டும் போலிருக்கிறதே!
ஒருபுறம் ரசாயணக் கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் குறித்த அச்சம் விரவிக் கிடக்கும் இந்நாளில் விலை உயர்ந்த மியாசாகி மாம்பழங்கள் குறித்த செய்தி விவசாயிகளை எந்த அளவுக்கு ஈர்க்கக் கூடும் என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு முயற்சி தான். நல்லபடியாக விளைந்தால் அதிக அளவில் வருமானம் ஈட்டித்தரும் விஷயமாக இருப்பதால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். இங்கு நமக்கு தட்பவெப்ப நிலையும் ஒத்து வர வேண்டும்.
இங்கு மலைப்பாங்கான இடங்களில் ஒருவேளை மியாசாகி பலன் தரலாம்!