ஜெகதீஷ் சந்திர போஸ் உயிர் இயற்பியல் மற்றும் தாவர உடலியல் துறைகளில் தமது முன்னோடி பணிகளுக்காக அறியப்பட்ட ஒரு சிறந்த இந்திய விஞ்ஞானி. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை முதன் முதலாக நிரூபித்தவர். அறிவியல் மற்றும் ஆன்மிகத்தின் இணைவுக்கான குறிப்பிடத்தக்க பாலமாகத் திகழ்ந்தார். அவரது சிறப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அறிவியல் ஆராய்ச்சிகள்: கல்கத்தாவில் பிறந்த போஸ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, நோபல் பரிசு பெற்ற லார்ட் ரேலியுடன் இணைந்து பல அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தினார். பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கு இன பாகுபாடு, நிதி மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும் தனது அறிவியல் ஆராய்ச்சியை கைவிடவில்லை. தனது ஆராய்ச்சிக்கு போதுமான பணத்தை சேகரித்து வீட்டிலேயே சோதனைகளை நடத்தினார்.
மின்காந்த அலைகளில் ஆராய்ச்சி: போஸ் 1895ல் மின்காந்த அலைகளை வயர்லெஸ் மூலம் காற்றின் வழியாக மட்டுமல்ல, சுவர்கள் மற்றும் மனித உடல் வழியாகவும் எவ்வாறு அனுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்தினார். எனவே, போஸ் வானொலி மற்றும் வயர்லெஸ் தகவல் தொடர்புகளின் தந்தையாக அங்கீகரிக்கப்படுகிறார். ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனிக்கு இவரது ஆராய்ச்சிகள் முன்னோடியாக இருந்தன.
புதிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு: நவீன நுண்ணலை பொறியியல் மற்றும் வானியலுக்கு அவசியமான ஹார்ன் ஆண்டனாக்கள், அலை வழிகாட்டிகள் மற்றும் துருவ முனைப்பான்கள் போன்ற புதிய உபகரணங்களை அவர் உருவாக்கினார். உலோகங்கள் கூட பல வெளிப்புற தூண்டுதல்களுக்கு பதிலளிக்கின்றன என்பதை டாக்டர் போஸ் நிரூபித்தார். அவர் பயன்படுத்திய பல கருவிகள் போஸ் கருவிகள் என்று அழைக்கப்பட்டன. இயந்திரங்கள் மற்றும் கத்தரிக்கோல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் எஃகு மற்றும் உலோகங்கள் கூட எவ்வாறு தேய்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவற்றின் செயல் திறனை மீண்டும் பெறுகின்றன என்பதை போஸின் கருவிகள் நிரூபித்துள்ளன. அவரது கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்புரிமை பெற்ற முதல் ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.
கிரஸ்கோகிராஃப்: மனிதர்கள் மற்றும் விலங்குகளை போலவே தாவரங்களுக்கும் உணர்ச்சி, உயிர் உண்டு என்பதை கண்டுபிடித்தார் போஸ். தாவரங்கள் தொடர்ந்து வளர்ந்து, மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், தாவரங்களின் இயக்கங்கள் மிகவும் சிறியதாகவும் மெதுவாகவும் நடப்பதால் தாவரத்திற்குள் இயக்கத்தைக் கண்டறிவது சவாலானது. 1900ல், கிரஸ்கோகிராஃப் எனப்படும் ஒரு கருவியை கண்டுபிடித்தார். அது தாவர திசுக்களின் செல் சவ்வுத் திறனில் மைக்ரோவேவ் எவ்வாறு மாற்றங்களை உருவாக்குகிறது என்பதை முதலில் ஆய்வு செய்தார். கிரஸ்கோகிராஃப் மூலம் தயாரிக்கப்பட்ட வரைபடங்களைப் பயன்படுத்தி தாவரங்களும் இரத்த ஓட்ட அமைப்பைப் பெற்று, மரியாதைக்குரிய உணர்வுள்ள உயிரினங்கள் என்பதை உலகிற்கு நிரூபித்தார்.
புதுமையான கருவிகள்: உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இரண்டும் வெளிப்புறத் தூண்டுதல்களுக்கு எவ்வாறு மின்சாரம் மூலம் பதில் அளிக்கின்றன என்பதை முதன் முதலில் நிரூபித்தார். இது பிற விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேலும், ஒளிச்சேர்க்கை குமிழி மற்றும் சோசியல் கிராஃப் போன்ற பல புதுமையான கருவிகளை அவர் வடிவமைத்தார். இவை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது சிறப்பம்சம் ஆகும்.
சந்திரபோஸிற்கு கிடைத்த அங்கீகாரங்கள்: சந்திரபோஸ் அறிவியல் புனைக்கதைகள் பல எழுதியுள்ளார். ரேடியோ நுண்ணலை ஒளியியல் ஆய்வுக்கு முன்னோடியாக இருந்தவர். வங்காள அறிவியல் புனை கதைகளின் தந்தையாக போஸ் கருதப்படுகிறார். சந்திரனில் உள்ள ஒரு பள்ளம் அவரது நினைவாக பெயரிடப்பட்டது.
போஸ் பல்வேறு பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பெற்றார். ஐன்ஸ்டீன், கியூரி மற்றும் மில்லிகன் ஆகியோருடன் சேர்ந்து, அறிவுசார் ஒத்துழைப்புக்கான லீக் ஆஃப் நேஷன்ஸ் இன்டர்நேஷனல் கமிட்டியில் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.