சீனாவில் ஹாங்ஸு நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் தீபிகா பள்ளிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் செளரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார். வில்வித்தைக்கான கூட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதனிடையே இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. ஆசிய போட்டியில் எப்படியாவது 100 பதக்கங்களை வென்றுவிட வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது.
வில்வித்தை கூட்டுப் போட்டியில் இந்திய ஆடவர்கள் பிரிவில் ஓஜாஸ் பிரவீண், பிரதமேஷ் சமாதான், அபிஷேக் வர்மா அணி தங்கம் வென்றது.
இதேபோல மகளிர் பிரிவில் பர்னீத் கெளர், அதிதி கோபிசந்த், ஜோதி சுரேகா வென்னம் அணி தங்கம் வென்றது.
மகளிர் மல்யுத்தப் போட்டியில் 53 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் ஆன்டிம், மங்கோலியாவின் போலோர்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தீபிகா பள்ளிகல் கார்திக் மற்றும் ஹரிந்தர் பால் சிங் சாந்து ஜோடி, அல்ஃபா அஜ்மன் மற்றும் முகமது சியாபிஃக் கமல் ஜோடியை 11க்கு 10, 11க்கு 10 என்ற கணக்கில் வென்றது.
பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் பிங்ஜியோவிடம் 16க்கு 21, 12க்கு 21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய், மலேசிய வீரர் ஜியா ஜீ லீயை வென்றார். இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சிங்கப்பூரின் பிரஜோகோ ஜோஹன் மற்றும் ஜீ ஜோநாகே ஜோடியை வென்றது.
மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய அணி, சீனாவிடம் 0க்கு 4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. எனினும் 2024 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது.