மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் தொடரை இழந்ததற்குப் பொறுப்பேற்பதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதி ஆட்டம் லாடர்ஹில்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு165 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
அதைத் தொடர்ந்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றதோடு, டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பிராண்டன் கிங் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும், நிக்கோலாஸ் பூரன் 47 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் இந்திய அணி தோல்வி கண்டது இதுவே முதல்முறையாகும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, ‘‘ஐந்தாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்ததோடு, தொடரையும் இழந்ததற்கு நான் உள்பட, இந்திய அணி வீரர்களின் மோசமான பேட்டிங்தான் காரணம். சூர்யகுமார் யாதவ் மட்டும் நின்று ஆடி 61 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக பந்து வீசினாலும், பேட்ஸ்மென்கள் சரிவர விளையாடவில்லை. ஜெய்ஸ்வால், ஸுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரும் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். நான்கூட சரியாக விளையாடவில்லை. 14 ரன்களில் வீழ்ந்து விட்டேன். அதுவும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. முதல் பத்து ஓவருக்கு பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அணி வீரர்கள் நன்றாக ஆடியபோதிலும் ரன்கள் எடுக்க தவறி விட்டனர். வீரர்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில சமயங்களில் தோல்வியும் நல்லதுதான். ஏனெனில், தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும்” என்று பேசினார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் டி20 போட்டி தொடர்களில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியைத் தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.