அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி அங்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தமுறை ஐசிசி சாம்பியன் ட்ராபி போட்டிகளை எடுத்து நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டிகள் நடத்தும் மைதானத்திற்கான இடங்களை இறுதி செய்து வருகிறது. 50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இது ஒரு விளையாட்டு தானே என்றாலும் கூட, பாகிஸ்தானில் இந்திய அணியால் பதற்றம் இல்லாமல் விளையாட முடியாது என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும். கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
சில மாதங்களுக்கு முன்பு 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு நாங்கள் வந்ததுபோல், சாம்பியன்ஷிப் தொடருக்காக நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.
இதுவரை இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என ஒரு ஆங்கில பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டது. தனது போட்டிகளை இந்தியா துபாயில் விளையாடும், ஆனால் பாகிஸ்தானில் விளையாடாது என்று அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து பிசிபி மொஷின் நாக்வி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால், நாங்கள் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று விளையாடலாமா வேண்டாமா என்பதை எங்கள் அரசாங்கம் தான் முடிவெடுக்கும் என்று எச்சரிக்கும் தொனியில் அவர் பேசினார்.
மேலும், “எழுத்துப்பூர்வமாக எந்தவொரு செய்திகளும் கிடைக்கவில்லை. ஒருவேளை வந்தால் உங்களிடம் (ஊடகங்கள்) நிச்சயம் பகிர்வோம். அவர்களுக்கு (இந்திய அணிக்கு) ஏதேனும் பிரச்னை இருக்கிறது என்றால், அதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். தற்போது வரை ஹைப்ரிட் முறை குறித்து நான் எதுவும் கேட்கவில்லை.
எதையும் கேட்பதற்குத் தயாராகவும் இல்லை. அரசியலையும் கிரிக்கெட்டையும் கலக்கக்கூடாது. நாங்கள் சாம்பியன்ஸ் தொடருக்கு தயாராகி வருகிறோம். ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால், நாங்கள் எங்களுடைய அரசு என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்போம். அரசு என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். சில காலங்களாக நாங்கள் நல்ல உறவையே வெளிப்படுத்தி வருகிறோம். ஒவ்வொருமுறையும் அதனை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.” என்றார்.