ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி புதன்கிழமை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.
கையில் லேசாக காயமடைந்துள்ள இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேலுக்கு உலகக் கோப்பை போட்டிவரை ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியா முதல் போட்டியை சந்திக்கிறது. அதற்குள் அக்ஸர் படேல் உடல் தகுதிபெற்றுவிடுவார் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இப்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். ஒருவேளை அக்ஸர் படேல், உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்குள் தகுதிபெறாவிட்டால் அஸ்வின் அணியில் இடம்பெறுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இளம் ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகுர் இருவரும் மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டதால் பும்ரா, கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர். சுப்மன் கில், ஷர்துல் தொடர்ந்து விளையாடி வருவதால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்துவீச்சாளர் முகேஷ்குமாருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.