‘இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இன்னும் துடிப்புடன் விளையாட வேண்டும்’ என்று அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் வலியுறுத்தியுள்ளார். முன்னணி வீரர்கள் ஆழமாக நின்று துடிப்புடன் ஆடாததே மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி தொடரில் தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த கடைசிப் போட்டியில் அர்ஷ்தீப் சிங், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ்குமார் போன்ற கடைசிநிலை ஆட்டக்காரர்களை நம்பித்தான் ஆட்டத்தை தொடர வேண்டியிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
“தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களில் வீழ்ந்தது. ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் இரண்டு ஓவர்கள் பாக்கி இருக்கும் நிலையிலேயே வெற்றி இலக்கை எட்டிவிட்டது.
இந்திய அணி வீரர்கள் சரிவர ஆடாததால் ஆட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய முடியவில்லை. வீரர்கள் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடினால்தான் அணி முன்னோக்கிச் செல்ல முடியும்.
இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கில் ஆழமோ அல்லது துடிப்போ இல்லை. பேட்டிங் விஷயத்தில் நாம் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பந்துவீச்சை நம்பி மட்டும் நாம் வெற்றி பெற முடியாது. நமது அணி வீரர்களின் பந்து வீச்சு திருப்திகரமாக இருந்தபோதிலும் அணி வீரர்கள் அடித்து விளையாடி ரன்களை குவித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினால்தான் வெற்றி என்பது சாத்தியாகும். எனவே, இந்திய வீரர்கள் இன்னும் துடிப்புடன் ஆட வேண்டும்” என்றார் ராகுல் திராவிட்.
மேலும் கூறிய அவர், “மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான அல்ஜார்ரி ஜோசப், 11வது பேட்ஸ்மேனாக களம் இறங்கியபோதிலும் ஒவ்வொரு பந்தையும் நிதானமாக எதிர்கொண்டு ஆடியதை சுட்டிக்காட்டிய அவர், பேட்டிங்கில் இந்திய அணிக்கு சில சவால்கள் இருக்கின்றன. அவற்றை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
திலக் வர்மா, யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகிய மூவரும் டி20 தொடரில் முதல் முறையாக களம் கண்டுள்ளனர். அவர்கள் மூவரின் செயல்பாடுகளும் திருப்தியாகவே இருந்தது. குறிப்பாக, திலக் வர்மா தனது திறமையான ஆட்டத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
நான்காவது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் தனது திறமையை நன்கு வெளிப்படுத்தி ஆடினார். ஐபிஎல் போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்று காட்டியுள்ளார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அவர், தனது திறமையை நிரூபிக்க வேண்டும்.
இன்னும் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது காயமடைந்து ஓய்விலிருக்கும் பூம்ரா, கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடுவார்கள் என்று நம்புகிறேன். இந்த மாதம் 18ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பூம்ரா விளையாட இருக்கிறார். மற்ற வீரர்களுக்கு ஆசிய கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படலாம்” என்றார் அவர்.