இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலககோப்பை போட்டிக்கு யார் கேப்டன் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஒருவழியாகத் தெரிவித்துவிட்டார்.
கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் பலரும் சோகக்கடலில் மூழ்கினர். இந்திய வீரர்களால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா சில காலம் வரை மனமுடைந்தே காணப்பட்டார். இதனால் உலககோப்பைக்கு பின்னர் எந்த டி20 போட்டிகளிலுமே ரோஹித் ஷர்மா விளையாடவில்லை.
அதேபோல் விராட் கோலியும் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் டி20 தொடர்களில் ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக மாற்றினார்கள். அதேபோல் IPL-ல் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹார்திக் பாண்டியாவை கேப்டனாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த தொடர் சம்பவங்களால் விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இனி டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர். மேலும் ரோஹித் ஷர்மாவிற்கும் ஹார்திக் பாண்டியாவிற்கும் ஏதும் மோதல் இருக்குமோ? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதனால் இந்த டி20 உலககோப்பையில் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் மேலோங்கியது. அந்தவகையில் இப்போது பிசிசிஐ செயலாளர் இதனைப் பற்றி வாய்த் திறந்திருக்கிறார்.
“நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பையின் இறுதிபோட்டியில் வேண்டுமென்றால் இந்திய அணி தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் இந்திய அணி அந்த தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றிபெற்று ரசிகர்களின் மனதை வென்றது என்றே கூற வேண்டும். அதேபோல் நிச்சயமாக இந்த டி20 உலககோப்பையையும் இந்திய அணி வெல்லும். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியின் மூவர்ண தேசிய கொடியை நாம் நிச்சயம் ஏற்றுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
இதன்மூலம் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவே அணியை வழிநடத்துவார் என்பது தெரியவந்துள்ளது. வெகுநாட்களுக்கு பின் ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார். அதற்கு முன்னர் ரோஹித் ஐபிஎல் தொடரில் விளையாடி 20 ஓவர்கள் கொண்ட போட்டிக்கு கம்பேக் கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் விராட் கோலி டி20 போட்டிகளில் கலந்துக்கொள்வாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.