இந்த ஆண்டு இதுவரை நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்ற பத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், அதிக சதங்கள் எடுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவருக்கான உலககோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர். உலககோப்பைத் தொடர் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி மட்டும் தான் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வலுவான அணியாக விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் மோசமாக விளையாடி வந்தாலும் , பிறகு தட்டு தடுமாறி புள்ளி பட்டியலில் முதல் நான்கில் ஒரு இடத்தைப் பிடித்து இறுதிபோட்டி வரை முன்னேறியது.
பத்து அணிகளுமே முழு வெறியுடன் இந்த தொடரில் விளையாடி வந்தனர். தென்னாப்பிரிக்கா அணி இரண்டு, மூன்று போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தியது. அதனை எதிர்த்து விளையாடிய எதிரணிகளும் அதிக ரன்களையே குவித்தனர். அதேபோல மற்ற அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு ரன்கள் குவித்து வந்தனர்.
இந்நிலையில் உலக கோப்பை முடியும் நேரத்தில் இந்த தொடரில் மொத்தம் வீரர்கள் எத்தனை சதம் எடுத்துள்ளனர் என்ற கணக்கை நேற்று ரிப்போர்ட் எடுத்தனர். இந்த ரிபோர்ட்டின்படி இதுவரை நடைபெற்ற உலககோப்பை தொடரைவிட இந்த தொடரில் தான் மொத்தம் 39 சதங்கள் எடுத்து அசத்தியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு அனைத்து அணி வீரர்களும் சேர்ந்து மொத்தம் 38 சதங்கள் எடுத்திருந்தனர்.
தென்னாப்பிரிக்க அணி அதிக போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் எடுத்ததால், இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 9 சதங்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளனர். அதேபோல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஏழு சதங்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டு உலக கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வீரர் குயிண்டன் டி காக் நான்கு சதங்கள் அடித்து வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி வீரர் விராட் கோலி பத்து போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
உலககோப்பையை எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற வெறியில் வீரர்கள் சதங்களைக் குவித்தார்கள் . இறுதிபோட்டியில் விராட் கோலி சதம் அடித்து குயிண்டன் டி காக்கிற்கு இணையாக பட்டியலில் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.