Shami & Ishan Kishan. 
விளையாட்டு

ஷமி, இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடமில்லை.. ஏன்?

ஜெ.ராகவன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. 17 பேர் கொண்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, விக்கெட்கீப்பர் பேட்ஸ்மென் இஷான் கிஷன் மற்றும் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகுர் ஆகியோர் இடம்பெறவில்லை. முதல் இரண்டு போட்டிகள் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி விளையாடவில்லை. அதே நேரத்தில் இஷான் கிஷன் ஓய்வு கேட்டிருந்தார். இதனிடையே இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் துருவ் ஜூரல் முதல் முறையாக அணியில் இடம்பெற்றுள்ளார். ரோகித் சர்மா அணி கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் இருப்பார்கள். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையே மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீர்ர்களின் பெயரை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது இறுதி டெஸ்ட் போட்டியிலும் இவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதிஷ் கிருஷ்ணா, டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. குஜராத்துக்கு எதிரான கர்நாடக ரஞ்சிக் கோப்பை போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் இடம்பெறுவாரா என்பது சந்தேகமே எனத் தெரியவந்துள்ளது.

துருவ் ஜூரல் கடந்த ஆண்டுதான் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வந்தார். இதுவரை 15 போட்டிகளில் பங்கேற்று 790 ரன்கள் எடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து முறை அரை சதம் எடுத்துள்ளார்.

இதனிடையே இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகேஷ்குமார் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்த முறை அவேஷ் கானும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட் ஹதராபாதில் ஜன. 25 முதல் 29 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் பிப். 2 முதல் 6 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதர மூன்று டெஸ்டுகள் ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலாவில் நடைபெறும்.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ்குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), மற்றும் அவேஷ்கான். 

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT