ஒலிம்பிக் நடைபெறும் பாரீஸில் போதிய வசதி செய்யப்படவில்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தங்கப்பதக்கம் வென்ற வீரர் ஒருவர் மரத்தடியில் தூங்குவது போன்ற போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு அரோக்கியமான உணவுகள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. குத்துச்சண்டை வீரர்களுக்கு மேகி சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை உணவு மட்டுமே ஹோட்டலில் தரப்படுகிறது என்றும், மதியம் மற்றும் இரவு வேளைக்கு இந்த மேகியை வாங்கி சமைத்து சாப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் நான்கு பேருக்கு மட்டுமே ஒலிம்பிக் கிராமத்தில் இடமளிக்கப்பட்டது. மீதமுள்ள மூவரும் ஹோட்டலில்தான் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற செய்திகள் வந்தன.
இப்படியான சூழ்நிலையில், ஒரு புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பாரீஸ், அதை ஒலிம்பிக் கிராமத்தில்தான் செயல்படுத்தியது. அதாவது தற்போது பாரீஸில் 30 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருக்கிறது.
இந்தநிலையில்தான், இயற்கைக்கு மாசு ஏற்படாத வகையில் தண்ணீர் மூலம் அறைகளை குளிரூட்டும் தொழில்நுட்பம் பிரான்சில் செயல்முறைப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பம் வீரர் வீராங்கனைகளுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
இதனால் இந்திய வீரர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, 40 ஏசி வாங்கி இந்திய வீரர்களுக்கு பொருத்திக் கொள்ளுமாறு கொடுத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் ஃப்ரான்ஸ் வீரர் தாமஸ் சீகன் என்பவர் ஒலிம்பிக் நிர்வாகத்தை கண்டித்து மரத்தடியில் உறங்கியிருக்கிறார். இவர் நீச்சல் பிரிவில் ஆடவருக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கம் வென்றவர். இதனை, சவுதி அரபிய வீரர் உசைன் வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார்.
தாமஸ் ஏற்கனவே இங்கு போதிய வசதி இல்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கிடையே இப்போது அவரின் இந்த செயலால், ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து பேசிய அவர், விளையாட்டு கிராமத்தில் ஏசி வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மிகவும் வெப்பமாக இருக்கிறது என்று பேசியுள்ளார்.
மேலும், “உணவு உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால், பல வீரர்கள் வெளியேறிவிட்டனர். நான் எப்போதுமே வீட்டில் இருக்கும்போது மதிய நேரத்தில் தான் தூங்குவேன். ஆனால் பாரிஸில் இருக்கும் வெப்பத்தால் என்னால் தூங்க முடியவில்லை. இந்த வசதியை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.” என்று பேசினார்.