இனி நடைபெறும் டி20 தொடர்களில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? இல்லையா?என்ற முடிவை அவர்களே எடுக்கட்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலககோப்பை தொடர் அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் ஆரம்பமாகி நவமபர் 19ம் தேதி முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித், அணியை நன்றாகவே வழிநடத்தினார். தொடக்க ஆட்டம் முதல் ஒரு போட்டிகளில் கூட தோல்வி பெறாமல் இறுதி போட்டிக்கு வந்ததற்கு முக்கிய காரணம் ரோஹித் ஷர்மா கேப்டன்ஷிப் என்றுத்தான் கூற வேண்டும்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. என்னத்தான் இந்திய அணி தோற்றாலும் ரோஹித்தின் கேப்டன்ஸி ரசிகர்களை கவர்ந்து விட்டது என்றே கூற வேண்டும்.
இன்னும் உலககோப்பை தொடரின் தோல்வியிலிருந்தே இந்திய அணி வீரர்கள் வெளிவரவில்லை. அதற்குள் சூர்ய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடிய டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ விரைவில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது என்று நேற்று தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டம் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரோஹித் ஷர்மா கேப்டன்ஸி மற்றும் அவரின் ஒருநாள் போட்டி பற்றி பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலககோப்பை தொடருக்கு முன்னரே ரோஹித் ஷர்மா தேர்வுக்குழுவினருடன் சில விஷயங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,” டி20 தொடர்களில் நான் விளையாடவில்லை என்றாலும் எனக்கு கவலையில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளியுங்கள் “ என்று கூறியிருக்கிறார். 36 வயதாகும் ரோஹித் ஷர்மா டி20 தொடர்களில் இளம் வீரர்களுக்கு வழிவிடுவதுதான் சரியென்று முன்கூட்டியே இந்த முடிவை எடுத்ததாக தெரியவருகிறது.
அடுத்த உலககோப்பை தொடர் 2027ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. ஆனால் அந்த தொடர் வருவதற்குள் ரோஹித் ஷர்மாவிற்கு 40 வயதை தொட்டுவிடும் என்பதால் அடுத்த உலககோப்பை தொடரில் கேப்டன்ஸி செய்வதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. இதனால் 2025ம் ஆண்டு நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரை ரோஹித் ஷர்மா தனது கேப்டன்ஸியை தொடருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து டி20 தொடர்களில் இனி விளையாடலாமா? வேண்டாமா?என்ற முடிவை ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியே எடுக்கவேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இருவரும் சிறிது காலம் டி20 தொடர்களில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் என்ன சொல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.