இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் சாய் சுதர்சன் தனது 22 வயதிலேயே சர்வதேச விளையாட்டில் அறிமுகமாகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர் இரண்டு தொடர்களிலுமே திறமையாக விளையாடினார். இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் சார்பாக விளையாடினார். 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகள் மட்டுமே விளையாடிய இவர் 145 ரன்களைக் குவித்தார்.
இதனால் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முக்கிய பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அந்த தொடரில் 8 போட்டிகளில் 368 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் இறுதிப் போட்டியில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய இவர் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவரின் இந்த ஆட்டத்தால் நிச்சயம் இந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா இந்தியா டி20 தொடரை அடுத்து, டிசம்பர் 10ம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இதில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
சாய் சுதர்சனுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரும் ருத்துராஜும் ஒப்பனராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் இந்திய A கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலககோப்பையில் ஏன் வாய்பளிக்க வில்லை எனக் கேள்விகள் எழுந்து வருகிறது. உலககோப்பைத் தொடரில் இல்லையென்றாலும் தென்னாப்பிரிக்கா உடனான இந்த தொடரில் அவரின் விளையாட்டைப் பார்த்துவிட்டு அடுத்த தொடர்களில் தொடர்ந்து இடம்பெருவாரா? என்பது தெரியவரும் என தகவல் வந்துள்ளது.