பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான போட்டியில், பாகிஸ்தான் அணி டீ ப்ரேக் சென்ற பின்னர் மைதானத்திற்கு திரும்பாமல் வெளிநடப்பு செய்ததால், இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்பட்டது என்பது குறித்து தெரியுமா?
நேற்றைய தினம் 2006ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணி கடைசி டெஸ்ட் போட்டியை ஒவல் மைதானத்தில் விளையாடியது. அந்த போட்டி இன்றுவரை யாராலும் மறக்க முடியாத போட்டியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்திற்கும் பாகிஸ்தானிற்கும்.
ஏனெனில், அந்த போட்டியின்போது பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக கூறி விதிகளின்படி ஐந்து ரன்கள் பெனால்டி வழங்கினார் நடுவர். மேலும் பந்தையும் மாற்றினார். இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போதைய பாகிஸ்தான் கேப்டனான இன்சாம் உல் ஹக், தாங்கள் பந்தை சேதப்படுத்தவில்லை என்று எவ்வளவோ எடுத்து கூறினார். மேலும் தங்கள் மீது வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனால், அவர்கள் அதனை கேட்கவே இல்லை.
இதற்கிடையே போட்டிக்கு நடுவே ப்ரேக் விடப்பட்டது. அப்போது தேநீர் இடைவேளைக்கு சென்ற பாகிஸ்தான் அணி மீண்டும் மைதானத்திற்கு வரவில்லை.
நடுவர்கள் பாகிஸ்தான் அணியிடம் சென்று, மைதானத்திற்கு வருமாறு எவ்வளவோ கெஞ்சினர். ஆனால், அவர்கள் வர மறுத்துவிட்டனர். தங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை திரும்பி பெறும்வரை வரமாட்டோம் என்று உறுதியாக இருந்தது பாகிஸ்தான் அணி. இதனை அடுத்து ஆட்டம் கைவிடப்பட்டு இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியது.
இதனால், ஐசிசியே இதனை விசாரணை செய்தது. பாகிஸ்தான் அணி உண்மையிலேயே பந்தை சேதப்படுத்தியதா? என்று விசாரணை செய்தது. இதனையடுத்து ஐசிசி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தவில்லை என்று அறிவித்தது. ஐசிசி, எனினும் போட்டியிலிருந்து பாதியில் விலகியதற்காக இன்சமாம் உல் ஹக்கிற்கு நான்கு ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனை விடவே இல்லை. இந்த போட்டியை ட்ரா என்று அறிவிக்கச் சொன்னது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியில் இருந்து டிரா என்று ஐசிசி முடிவை மாற்றியது. எனினும் அடுத்த ஆண்டு மீண்டும் யூ டர்ன் எடுத்து டிராவிலிருந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக முடிவு மாற்றப்பட்டது.
இந்த ஒரு போட்டி ஆண்டு கணக்கில் வழக்கில் இருந்து வந்தது, அப்போது உலக கிரிக்கெட்டையே கவனிக்க வைத்தது.