Rafael Nadal 
விளையாட்டு

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

ரா.வ.பாலகிருஷ்ணன்

தனிநபர் விளையாட்டுகளில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக இன்று வரையிலும் திகழ்கிறது டென்னிஸ். கடந்த 20 வருடங்களாக ஆண்களுக்கான டென்னிஸ் உலகை ஆட்சி செய்தவர்கள் என்றால் ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரின் பெயரைத் தான் சொல்ல வேண்டும். இவர்கள் மூவரும் “டென்னிஸ் விளையாட்டின் மும்மூர்த்திகள்” என்றே வர்ணிக்கலாம். அந்த அளவிற்கு மூவரும் மாறி மாறி பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். இதில் நாம் இப்போது பார்க்கப் போவது ரபேல் நடாலின் வெற்றிக் கதையைத் தான்.

ரபேல் நடால் 1986 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது உறவினரான டோனி நடால் கொடுத்த ஊக்கத்தினால், எட்டு வயதில் டென்னிஸ் பயிற்சியைத் தொடங்கினார் நடால். 1997 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் ஜூனியர் அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பல பட்டங்களை வென்று, டென்னிஸ் உலகின் அடுத்த இளம் நாயகனாக ஜொலித்தார். 2001 ஆம் ஆண்டில் இருந்து தொழில்முறை டென்னிஸில் பங்கேற்ற நடால், தனது அசாத்திய திறமையின் மூலம் அரங்கை அதிரச் செய்தார். அப்போது அவரது வெற்றி சதவிகிதம் 83 ஆக இருந்தது, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

2003 ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் அறிமுகமான நடால், 2005 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் தான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அரையிறுதியில் ரோஜர் பெடரரையும், இறுதிப்போட்டியில் மரியனோவையும் வீழ்த்தினார். தொடர்ந்து 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் வரிசையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார். 20 வயதிற்குள்ளேயே 16 ஏடிபி டூர் பட்டங்களை வென்று அசத்தினார் ரபேல் நடால். மேலும் 2008 இல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2009 ஆம் ஆண்டிலும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 2010 ஆம் ஆண்டிலும் கைப்பற்றினார்.

இதுவரையில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், 92 ஏடிபி தொடர் பட்டங்களையும் வென்றிருக்கிறார் நடால். “களிமண் களத்தின் இராஜா” என அழைக்கப்படும் ரபேல் நடால், களத்தில் இறங்கினால் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக வைத்திருப்பார். 38 வயதான நடால், கொரோனா காலகட்டத்தில் சில காலங்கள் ஓய்வை எடுத்துக் கொண்டார். அதன் பின் களத்திற்கு திரும்பிய நடால், ஒருசில போட்டிகளை வென்றாலும், வெற்றி சதவிகிதம் குறையத் தொடங்கியது. இதற்கு மேல் விளையாட தனது உடல் ஒத்துழைக்காது என்பதை உணர்ந்து, 2024 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நடால். தான் விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியைப் பெற்றாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ரபேல் நடால், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

ஓய்வு குறித்து நடால் கூறுகையில், “நான் வெற்றி பெற்ற பட்டங்களின் எண்ணிக்கையை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கலாம். ஆனால், மல்லோர்கா எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதனாக ரசிகர்கள் மனதில் நான் நினைவு கூரப்பட வேண்டும். நான் விளையாடிய முதல் டேவிஸ் கோப்பையிலும் தோல்வி அடைந்தேன். தற்போது டேவிஸ் கோப்பையின் கடைசி போட்டியிலும் தோல்வி அடைந்தேன். இதன் மூலம் எனது டென்னிஸ் வாழ்க்கை ஒரு வட்டமாக முடிவுக்கு வந்துள்ளது” எனக் கூறினார்.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

SCROLL FOR NEXT