சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரில் உள்ள தாதுக்கள், உப்புகள் கடினமாகி, சிறுநீரகங்களில் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் சிறிய, கடினமான படிவுகளாகும். இவை பலருக்கு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சனை என்றாலும் கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த கற்கள் சிறியதாக இருந்தால் சிறுநீர் வழியாக வெளியேறலாம், ஆனால் பெரிய கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்து, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
சிறுநீரக கற்கள் ஏன் ஏற்படுகின்றன?
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு பல காரணங்களை சொல்லலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரில் தாதுக்கள் செறிவாக மாறும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சில உணவுகள், குறிப்பாக சோடியம், ஆக்ஸலேட் மற்றும் புரதம் அதிகமாக உள்ள உணவுகள், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
சிறுநீரக கற்கள் குடும்ப வரலாறு இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அது வரும் வாய்ப்பு அதிகம். பரத்தீராய்டு சுரப்பி கோளாறுகள், நீரிழிவு நோய் மற்றும் சிறுகுடல் நோய்கள் போன்ற சில நோய்கள் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். மேலும், சில மருந்துகள் சிறுநீரில் தாதுக்களின் அளவை அதிகரித்து, கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
சிறுநீரகக் கற்கள் ஏற்படுத்தும் அறிகுறிகள்:
சிறுநீரகக் கற்கள் ஏற்படுத்தும் அறிகுறிகள் கல்லின் அளவு, அது இருக்கும் இடம், அது நகரும் வழி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இதனால் பக்கவாட்டில், வயிற்றில் அல்லது இடுப்பில் ஏற்படலாம்.
சிறுநீரில் இரத்தம் இருப்பது கல்லால் சிறுநீர் பாதையில் ஏற்படும் காயத்தைக் குறிப்பதாகும்.
அதிக வலி காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்.
கல் சிறுநீர் பாதையைத் தொடும் போது எரிச்சல் ஏற்படலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது வலி போன்றவையும் சிறுநீரக கற்களின் அறிகுறிகள்.
சிறுநீரக கற்கள் ஆபத்தானதா?
சிறுநீரக கற்கள் சில சமயங்களில் ஆபத்தானதாக இருக்கலாம். பெரிய கற்கள் சிறுநீர் பாதையை முழுமையாக அடைத்துவிட்டால், சிறுநீர் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகம் பாதிப்பு அல்லது சிறுநீரகம் செயல் இழக்கும் அபாயம். கற்கள் சிறுநீரகங்களில் நீண்ட காலமாக இருந்தால், சிறுநீரகத்தில் காயம் ஏற்பட்டு, சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
சிறுநீரக கற்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை
சிறுநீரக கற்களை கண்டறிய, மருத்துவர் உடல் பரிசோதனை செய்து, சிறுநீர் பரிசோதனை, இரத்த பரிசோதனை மற்றும் கருவி பரிசோதனைகள் (அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன்) ஆகியவற்றைப் பரிந்துரைப்பார்.
சிறுநீரக கற்களுக்கான சிகிச்சை கல்லின் அளவு, அது இருக்கும் இடம், ஏற்படும் அறிகுறிகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். மருத்துவரின் பரிந்துரை பேயரில் வலி நிவாரணிகள் மற்றும் கற்களை சிதைக்க உதவும் மருந்துகள் அளிக்கப்படும்.
அதிர்வலைகள் மூலம் கல் நொறுக்குதல்: இந்த முறையில், உடலுக்கு வெளியே இருந்து அதிர்வலைகள் கல் மீது செலுத்தப்பட்டு, அது சிறிய துண்டுகளாக உடைக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை: பெரிய கற்கள் அல்லது அதிர்வலைகள் மூலம் கல் நொறுக்குதல் சிகிச்சைக்கு பலனளிக்காதவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
நாம் பயப்படும் அளவுக்கு சிறுநீரகக் கற்கள் மிக மோசமானது இல்லை என்றாலும், அதனால் பெரிய பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மேலே குறிப்பிட்ட சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் உங்களுக்குத் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.