வெண்பூசணி எதிர்மறையான எண்ணங்களை தகர்த்து நேர்மறையான எண்ணங்களை கொடுக்கக்கூடியது என்பதால் இதை திருஷ்டி காயாகவும் பயன்படுத்துகிறோம். ஆனால், வெண்பூசணியில் எக்கச்சக்க மருத்துவப் பயன்கள் இருக்கின்றன என்பது தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வெண்பூணியில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி, நியாசின், தையாமின், Riboflavin, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவையும் இருக்கின்றன. இத்தனை சத்துக்களைக் கொண்ட வெண்பூசணி ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
1. வெண்பூசணி ஜூஸ் உடலை சுத்தமாக்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்கும். வெண்பூசணியின் சதைப்பகுதி பஞ்சு போன்று இருப்பதால், இது குடலில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.
2. உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், கல்லீரல், சிறுநீரகத்தைத் தூண்டி இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். இதனால்தான் ஆயுர்வேத மருத்துவத்தில், வெண்பூசணி ஜூஸை சிறந்த Detox ஜூஸாக பயன்படுத்துகிறார்கள்.
3. வெண்பூசணி காரத்தன்மை அதிகம் உள்ள காய் என்பதால் வயிற்றில் உள்ள செரிமான அமிலத்தின் PH அளவை சமன்படுத்துகிறது. இதன் காரணமாக உணவு எளிதில் ஜீரணமாவது மட்டுமில்லாமல், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கிறது.
4. வெண்பூசணியில் உள்ள வைட்டமின் பி6 மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். குழந்தைகளுக்கு காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி ஜூஸ் கொடுத்து வர அவர்களின் நினைவாற்றல் பல மடங்காக அதிகரிக்கும்.
5. அல்சர் பிரச்னை இருப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் வெண்பூசணி ஜூஸ் சாப்பிட்டு வர, விரைவில் அல்சர் பிரச்னை குணமாகும். மேலும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
6. வெண்பூசணியில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இந்த ஜூஸை காலையில் குடிக்கும்போது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, மேலும் உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தடுக்கிறது. இதனால், விரைவில் உடல் எடையைக் குறைக்க முடியும்.
7. அதிக உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் காலையில் வெண்பூசணி ஜூஸ் குடித்து வர உடல் சூட்டைக் குறைத்து உடலில் உள்ள Electrolytes அளவை சீராக வைத்து உடலுக்குக் குளிர்ச்சியை தருகிறது.
8. வெண்பூசணியில் வைட்டமின் B2 என்று சொல்லக்கூடிய Riboflavin சத்துக்கள் உள்ளன. இது கண் சம்பந்தமான பிரச்னைகளை குணமாக்குகிறது. கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் வெண்பூசணி சாறு அருந்தி வர கண்களுக்கு மிகவும் நல்லதாகும்.