உடலுக்குள் செல்லும் நீரை விட, அதிகமான அளவில் வியர்வை, சிறுநீர், பேதி, வாந்தி போன்றவற்றால் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறிவிடும் நிலையே டீஹைட்ரேஷன் ஆகும். உடலிலுள்ள நீரின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே சென்று விட்டால் டீஹைட்ரேஷன் ஏற்படுகிறது. இந்நிலை மிகச்சிறிய அளவில் ஏற்பட்டாலும், உடனே கட்டுப்படுத்தப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, டீஹைட்ரேஷன் சிறிய அளவில் ஏற்பட்டாலும் உடனே கவனித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். சிறு குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிக விரைவில் டீஹைட்ரேஷன் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது.
மருத்துவர் பரிசோதித்து டீஹைட்ரேஷன் என்று கூறுவதற்குள், லேசாக ஏற்பட்டுள்ள டீஹைட்ரேஷன் கூட மிகக் கடுமையாக மாறி விடலாம். எனவே, மருத்துவர் வருவதற்கு முன்பாகவே குடும்ப அங்கத்தினர்கள், கீழ்க்கண்ட அறிகுறிகளை அடையாளம் கண்டு மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.
உடலில் நீர் வற்றிய நிலையின் அறிகுறிகள்: 1. உலர்ந்த வாய், நாக்கு, 2. வெடிப்பு ஏற்பட்டுள்ள உதடுகள், 3. குறைந்த அளவு சிறுநீர் கழிதல், 4. சருமம் ஈரப்பசையுடன் கெட்டியாகத் தோற்றமளிக்காமல், வறண்டு, தொள தொளப்பாகக் காட்சி இருத்தல், 5. கண்களில் நீர் வராமலேயே குழந்தை அழும்போது அல்லது உதடுகளை நாக்கால் நக்கிக்கொண்டே இருப்பது போன்றவையாகும்.
உடலில் நீர் வற்றிய நிலையைக் கட்டுப்படுத்துவது எப்படி?: மூன்று முறைக்கு மேல் பேதியோ, வாந்தியோ ஏற்பட்ட உடனேயே, நீர் மற்றும் மற்ற பானங்களை (தாகம் எடுக்காவிட்டாலும் கூட) உடனடியாகக் குடிக்கக் கொடுக்க வேண்டும். ஒரேயடியாகத் தொடர்ந்து நீர் குடிப்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி, நீரை உறிஞ்சிக் குடிப்பது நல்லது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தாகம் எடுப்பது பற்றி சரியாக அறிந்துகொள்ள முடியாது அல்லது தனக்கு நீர் வற்றிய நிலை ஏற்பட்டுள்ளது, தாம் நீர் குடிக்க வேண்டும் என்ற கவனம் ஏற்படாது.
எனவே, இம்மாதிரியான நபருக்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, நன்றாகக் கொதிக்க வைத்துக் குளிர வைத்த நீரை ஸ்பூன் மூலமாகக் கொடுக்க வேண்டும். ஆனால், பால் கொடுக்கக் கூடாது. ஒரு லிட்டர் நீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும், அரை டீஸ்பூன் உப்பும் கலந்து அவ்வப்போது பருகச்செய்வது மிகச் சிறந்தது. இளநீர் மிகவும் உத்தமமானது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். கடுமையான டீஹைட்ரேஷன் ஏற்பட்டிருந்தால் இம்முறை பலனளிக்காது. இந்நிலையில் மிக விரைவில் மருத்துவ சிகிச்சை செய்வது மிகவும் அவசியம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு பிரிட்டனைச் சேர்ந்த மலையேறும் குழு, ‘உலகத்தின் கூரை’ எனப்படும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். மலையேறுவதில் மிகத் திறமையானவர்கள் என்று பெயர்பெற்ற ஸ்விட்சர்லாந்து மலையேறும் குழுவினர், பல தடவை எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் தோல்வியடைந்தனர். பிரிட்டன் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஹண்ட், ஸ்விஸ் குழுவுக்கு என்ன காரணத்தினால் தோல்வி ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது, அக்குழு சக்தி மிகுந்த
ஆகாரங்களை உண்டு, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று டம்ளர் மட்டும் நீர் குடித்து வந்தனர் என்று தெரிந்தது. பிரிட்டிஷ் குழுவினர் தினமும் 12 தம்ளர் நீர் குடிக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டது. அதன் பிறகே பிரிட்டிஷ் குழு இந்த மலையேற்றத்தில் வெற்றி பெற்றது. இப்போது தெரிகிறதா நீரின் மகிமை?