தண்ணீர் மற்றும் உணவு இவை இரண்டும் நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால், சில உணவுகளைச் சாப்பிடும்போது நாம் அத்துடன் தண்ணீர் எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சாப்பிடும்போது அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், இது எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானது அல்ல என சொல்லப்படுகிறது.
சில உணவுகளுடன் தண்ணீர் உட்கொள்ளும்போது அது நமக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் அஜீரணப் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கீழ்க்கண்ட ஐந்து உணவுகளை உண்ணும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
சிட்ரஸ் பழங்கள்: திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளும்போது அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய பழங்களை அதிகப்படியான தண்ணீருடன் உட்கொள்வதால் வயிற்றில் அசௌகரிய உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முதலில் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது நல்லது.
காரமான உணவுகள்: காரமான அல்லது சூடான உணவுகளை சாப்பிடும்போது அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக காரம் கொண்ட உணவுகளை உண்ணும்போது தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் வெப்பத்தை பரப்பி எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம். அது போன்ற சமயங்களில் தயிர், பால் போன்ற பொருட்களை உண்பது மூலமாக அத்தகைய பிரச்னையை தீர்க்க முடியும்.
தயிர்: தயிர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும் என்றாலும், தயிர் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது அவற்றின் செயல் திறனைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. தயிர் சாப்பிடும்போது அதில் தண்ணீர் கலந்து குடிக்கலாம். ஆனால், தயிரையும் தண்ணீரையும் தனித்தனியாக ஒரே சமயத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே, வாழைப்பழம் சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடித்தால் அது நார்ச்சத்துக்களை நீர்த்துப்போகச் செய்யும். இதனால் செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
அரிசி சாதம்: அரிசி உணவு உட்கொள்ளும்போது அதிகமாக தண்ணீர் அருந்துவதால் செரிமானத்துக்குத் தேவையான வயிற்று அமிலங்கள் நீர்த்துப்போவதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் சாதம் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும், அரிசி சார்ந்த உணவை சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.