பாம் ஜூஸ் (Palm Juice) எனப்படும் பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கின்ற பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரை, சுண்ணாம்பு தடவிய மண் பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர். பதநீரிலிருந்து கிடைக்கும் ஏராளமான நற்பயன்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊக்கம் தரும் பானம் இது. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வலி போன்றவற்றை குணமாக்கும்.
இதிலடங்கியுள்ள சில வகை கூட்டுப்பொருட்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டவை. அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நல்ல ஆரோக்கியம் தரும். பதநீரிலுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் எலும்புகளுக்கு வலுவும் ஆரோக்கியமும் தருகின்றன. வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்திற்கு ஆரோக்கியமும் இயற்கையான பளபளப்பும் தருவதோடு, வயதான தோற்றம் வருவதையும் தடுக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் C நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
சுகவீனங்களை எதிர்த்துப் போராட இது உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஃபிரி ரேடிக்கல்களால் உண்டாகும் செல் சிதைவைத் தடுக்கின்றன; நாள்பட்ட வியாதிகள் வராமல் உடலைப் பாதுகாக்கின்றன. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன; மலச்சிக்கலை நீக்குகின்றன.
பதநீரில் இயற்கையாக நிறைந்துள்ள இனிப்புச் சத்தானது உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்களில் உள்ள எலக்ட்ரோலைட்கள் உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவி புரிகின்றன. பதநீரை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.
இத்தனை நற்பயன்கள் கொண்ட பதநீரை அது தாராளமாய் கிடைக்கக்கூடிய கோடைக் காலத்தில் அடிக்கடி வாங்கிக் குடித்து ஆரோக்கியம் பெறுவோம்.