கயிற்றை சுழல விட்டு துள்ளிக் குதிக்கும் 'ஸ்கிப்பிங்’ ஒரு விளையாட்டுதான். ஆனால், அது உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உதவும் விளையாட்டு. கயிற்றில் குதிப்பது பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் இது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி வகையை சார்ந்ததாகும். ஸ்கிப்பிங்கை விளையாட்டாகப் பார்க்கும் அந்தக் காலத்தை விட்டு விடுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஸ்கிப்பிங் செய்வது தலைசிறந்த உடற்பயிற்சியாக பாருங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஸ்கிப்பிங் செய்யலாம். இதனால் எண்ணற்ற பயன்கள் உண்டு. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஸ்கிப்பிங் நல்ல பலனைத் தரும். பத்து நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது 2 கி.மீ. தொலைவுக்கு ஓடுவதற்கு சமம் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.
அன்றாடம் ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் நபர்களின் தினசரி வேலைத் திறன் மற்றவர்களை விட 25 சதவீதம் அதிகரிக்கிறது என்கிறார் நார்வே நாட்டின் பிரபல உளவியல் அறிஞர் ராடல். தினமும் ஸ்கிப்பிங் செய்வது உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரைத்து விடும். தொப்பையை குறைப்பதற்கு இது ஒரு நல்ல உடற்பயிற்சி.
ஸ்கிப்பிங் செய்வது உடலில் உள்ள உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வு தருகிறது. ஸ்கிப்பிங் செய்வது மன அழுத்தம், மந்தத்தன்மையை நீக்கி, மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது. 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்கிப்பிங் கவலைகளைத் தணித்து, உங்கள் மனநிலையை உயர்த்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஸ்கிப்பிங் இருதய உடற்பயிற்சிக்கு மிகவும் நல்லது.
ஸ்கிப்பிங் செய்வது உடலில் எண்டோர்பின் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே, அரை மணி நேரம் முடியாவிட்டால் தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது ஸ்கிப்பிங் விளையாடுங்கள். ஸ்கிப்பிங் மூளையில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. தினமும் தவறாமல் ஸ்கிப்பிங் செய்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஸ்கிப்பிங் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயம், நுரையீரலின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. கை, கால், தொடைப் பகுதி தசைகள் வலுவடைகின்றன.
மூட்டு வலி, கணுக்கால் வலி ஸ்கிப்பிங் செய்வதால் நீங்குகிறது. இடுப்பு வலி உள்ளவர்களுக்கு ஸ்கிப்பிங் ஒரு வலி நிவாரணி போல் செயல்படுகிறது. இதனால் முதுகெலும்பு முடிச்சுக்கள் பலம் பெறுகின்றன. நம் உடல் தசைகளை பலமாக்குவதுடன் மனதிற்கும், முகத்திற்கும் பொலிவை தருகிறது. ஸ்கிப்பிங் என்பது குறிப்பாக பெண்களுக்கு சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். நீங்கள் பலவீனமான எலும்புகள் மற்றும் மந்தமான வாழ்க்கை முறையுடன் போராடும் ஒருவராக இருந்தால், இந்தப் பயிற்சி உங்களுக்கு ஒரு மந்திரமாகும். ஏனெனில், ஸ்கிப்பிங் செய்வதால் உங்கள் எலும்புகள் பலமடைகின்றன.
ஸ்கிப்பிங் பயிற்சியை புதிதாகத் தொடங்குபவர்களுக்கு ஆரம்ப காலத்தில் சில பிரச்னைகள் வரும். அதாவது கால், தொடைப் பகுதி, உடம்பு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். ஸ்கிப்பிங் செய்வதற்காக தொடர்ந்து பயிற்சி எடுக்கும்போது நம்மை அறியாமலேயே அதன் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டு விடும். ஆரோக்கியமான உடலை பெற்ற யார் வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் செய்யலாம். ஆனால், மூட்டு பிரச்னை உள்ளவர்கள் கர்ப்பிணிப் பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் ஸ்கிப்பிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.