ஆண்டு முழுவதும் எளிதாகக் கிடைக்கும் பழம் பப்பாளி. அதேபோல, பப்பாளியை எந்த பருவகாலத்திலும் சாப்பிடலாம். பப்பாளி பழம் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையைக் குறைக்க பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து மருத்துவர்கள். ஏனெனில், இதில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இதயத்துக்கு மிகவும் உகந்தது. பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
பொதுவாக, பழ வகைகளில் கலோரி குறைவு. அதிலும் பப்பாளியில் கலோரி மிகவும் குறைவு. உடல் எடை அதிகரிக்க கலோரிகள் அதிகரிப்பதும் காரணமாகும். பப்பாளியில் இயற்கையிலேயே சர்க்கரை சத்து குறைவாகவே உள்ளது. இதனால்தான் மருத்துவர்கள் உடல் எடையைக் குறைக்க பப்பாளியை பரிந்துரைக்கிறார்கள்.
பப்பாளி சாப்பிடுவதால் உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாகச் செயல்படுவதுடன், வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்க முடியும் என்றாலும், பப்பாளியை அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்துவிடாதீர்கள்.