மனிதனுக்கு இயற்கை தந்த அருட்கொடை கீரைகள். கீரை வகைகள் ஒவ்வொன்றும் நமது உடல் நலனுக்கு ஒவ்வொரு வகையில் உதவுகின்றன. அதனால்தான் அன்றாட சமையலில் அனைவருமே கீரையை பயன்படுத்தி வருகிறோம். இனி, கீரை வகைகள் சிலவற்றையும் அவற்றில் உள்ள முக்கியமான சத்துக்கள் என்ன என்பதைக் குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
புதினா கீரை: இரும்புச் சத்து மிகுந்துள்ளதால் இது இரத்த சோகையைப் போக்கும்.
மணத்தக்காளி கீரை: இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளதால் வாய்ப்புண், குடல்புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.
கொத்தமல்லி கீரை: வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்துகளும் உள்ளதால் பார்வைக் கோளாறு, இரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.
புளிச்சக் கீரை: வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளதால் இரத்த சோகையைப் போக்கும். இக்கீரையைச் சமைத்த நீரை வீணாக்காமல் சூப், ரசம் வைத்து சாப்பிட, சத்துக்கள் கிடைக்கும்.
வெந்தயக் கீரை: இதில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் பார்வைக் கோளாறு, இரத்த சோகையைப் போக்கும். இக்கீரையை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும்.
பசலைக் கீரை: வைட்டமின் ஏ, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் உள்ளன. ஆதலால் பார்வைத் திறனை இது மேம்படுத்தி உடல் சோர்வைத் தடுக்கும்.
பொன்னாங்கண்ணிக் கீரை: இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ் சிறிதளவு உள்ளது. மேலும், இரும்பு, கால்சியம் சத்துக்களும் உள்ளன. இக்கீரை சருமத்தை தகதகவென தங்கம் போல் மிளிர வைக்கும்.
முருங்கைக் கீரை: வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை இந்தக் கீரையில் உள்ளன. வைட்டமின் ஏ சத்து இதில் மிகுந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.
முளைக்கீரை: வைட்டமின்கள் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை இக்கீரையில் உள்ளன. இது இரத்த சோகையைப் போக்கும். இந்தக் கீரையை சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
அகத்திக்கீரை: இக்கீரையில் வைட்டமின் ஏ, டி, சி, கால்சியம் ஆகியவை சிறிதளவு உள்ளன. வைட்டமின் ஏ 5400 மைக்ரோ கிராம் உள்ளது. ஆதலால் இது இரத்த சோகை, எலும்பு பலவீனமாதல் ஆகியவை வராமல் காக்கும். இந்தக் கீரையை மூடிய பாத்திரத்தில் சமைத்தால் சத்துக்கள் வீணாகாது.
கருவேப்பிலை: இதில் வைட்டமின் ஏ 7500 மைக்ரோ கிராம் உள்ளது. போலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி, சி ஆகியவை சிறிதளவு உள்ளன. வைட்டமின் ஏ சத்து மிகுந்துள்ளதால் கண் பார்வைக்கு இது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.