நாம் வாழும் இந்த பூமியில் பல வகையான மருத்துவ குணம் கொண்ட செடி, கொடி, மரங்கள் உள்ளன. நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒவ்வாெரு செடி, கொடி, மரங்களும் பல மருத்துவ நன்மைகள் கொண்டவை. ஆனால் நாம் அதனை எல்லாம் களை செடிகள் என்று கடந்து செல்கிறோம். ஏதோ ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கு தீர்வு என்ன என்பதை தேடி செல்லும் போதுதான் சில மரங்களின் மகத்துவம் பற்றி நாம் அறிந்துக்கொள்கிறோம்.
கிராமங்களில் வளர்ந்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பழங்களில் ஒன்று தான் இந்த நுணா பழம். மேலும் விடுமுறை நாட்களில் இந்த நுணா காய் பறித்து வீடு கட்டி விளையாடிய அனுபவம் இருக்கும். பல வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு அதனால் ஒருசிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கும். அவ்வாறு பக்க விளைவுக்கான சிறந்த நிவாரணி தான் இந்த நுணா பழம். நுணா பழம் மட்டும் மல்லாமல், மரம் முழுமையும் மருத்துவ குணம் வாய்ந்தது.
நாம் இந்த பதிவில் நுணா மரத்தின் பயன்களை பற்றி காண்போம்.
நுணா மரம்:
இந்த நுணா மரத்தை மஞ்சணத்தி அல்லது மஞ்சள்நாறி என அழைப்பார்கள். ஆங்கிலத்தில் (Morinda tinctoria) என்று பெயர். மஞ்சணத்தி என்னும் இந்த மரத்தைதான் தமிழ் சினிமாவில் பல பாடல்களில் கூறியிருப்பார்கள். நம் நாட்டில் ஒரு சில இடங்களில் மற்றும் மேலை நாடுகளில் அதிகம் கிடைக்கும் 'வெண் நுணா' பழத்திற்கு ஈடானது இந்த நாட்டு நுணா பழம். மேலை நாடுகளில் இந்த வெண் நுணா பழத்தின் சாறு 'நோனி ஜூஸ்' என்ற பெயரில் விலை அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.
“கருங்கால் மராஅம் நுணவோ டலர இருஞ்சிறை வண்டினம் பாலை முரல” என்னும் ஐங்குறு நூலில் நுணா மரம் இடம் பெற்றுள்ளது.
நுணா மரத்தின் பயன்கள்:
நுணா மரம் வலிமையான மரமாகும். இந்த மரத்தின் கட்டைகள் நீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. எனவே இந்த மரத்தின் கட்டையை மாட்டு வண்டியில் இரு மாடுகளுக்கு இடையில் வைத்து பூட்டுவார்கள். ஏனென்றால் மற்ற மரங்கள் கனமாக இருக்கும். மாடுகளால் சுமக்க முடியாது. எனவே இந்த நுணா மரம் வலிமையாக இருப்பதோடு கனமாக இருக்காது.
நுணா மரத்தில் கட்டில், மண்வெட்டி போன்ற பல பொருட்கள் செய்வார்கள். மேலும் இந்த மரத்தால் செய்த கட்டிலில் படுத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
நன்றாக வளர்ந்த பெரிய மரத்தை வெட்டினால் மரத்தின் நடுவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த கட்டைகளை நீரில் நன்றாக கொதிக்க வைக்கும் போது நீர் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதை துணிகளில் சாயம் ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள். அதனால் தான் இந்த மரம் மஞ்சணத்தி என்னும் பெயர் பெற்றது.
இந்த பழத்தின் வாசனை சற்று குமட்டல் வருவது போல இருக்கும். ஆனால் பழத்தில் பல நன்மைகள் உள்ளது. இந்த நுணா பழத்தில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது.
நுணா இலை, பட்டை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து குளித்து வந்தால் உடல் வலி, சோம்பல் நீங்கும். மேலும் நீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலை பாரம், தலை வலி குணமாகும்.
நுணா மரத்தில் இருந்து ஒரு வகையான எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் ஆயுர்வேதத்தில் வலி நிவாரணியாக பயன்படுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் நுணா பழம் சாப்பிட்டால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு இந்த பழம் சாப்பிடும் போது சிறந்த தீர்வு கிடைக்கும்.
குறிப்பு: இந்த பழம் இயற்கையாக மருத்துவ குணம் கொண்ட பழம். அனைவரும் சாப்பிடலாம். எனினும் மற்ற நோய்களுக்கு ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடலாம்.