சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்வும் ஒரு ஸ்நாக்ஸ் வகை பாப்கார்ன். முக்கியமாக, தியேட்டர்கள், பீச், மால்களில் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு பொருள். இது உடல் நலத்திற்கு நல்லதா அல்லது கெடுதல் தருமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பாப்கார்னின் நன்மைகள்:
நார்ச்சத்து நிறைந்தது: பாப்கார்ன் Zea mays everta எனப்படும் ஒரு வகை சோளச் செடியிலிருந்து வருகிறது. நாம் உண்ணும் சோளம் மாவுச்சத்துள்ள காய்கறியாகக் கருதப்படும் அதே வேளையில், பாப்கார்ன் முழு தானியமாக வகைப்படுத்தப்படுகிறது. இதில் உள்ள முக்கிய நார்ச்சத்து கரையாத ஃபைபர் என்று அழைக்கப்படுகிறது. இது செரிமானத்தின்போது உடைந்து போகாது. மாறாக, இது செரிமானப் பாதையை விரைவுபடுத்த உதவுகிறது. இது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்க உதவுகிறது. அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது, எடை மேலாண்மைக்கு உதவும்
கலோரிகள் குறைவு: பாப்கார்ன் குறைந்த கலோரி உள்ள உணவு. இது எடை இழப்பு மற்றும் எடை மேலாண்மைக்கு உதவும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது: பாப்கார்னில் பாலிபினால்கள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உடலில் உள்ள உயிரணு சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பாப்கார்னில் குறிப்பாக ஃபெருலிக் அமிலம் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், அழற்சி குடல் நோய் (IBD), அல்சைமர் நோய் மற்றும் நீரிழிவு போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கவும் ஃபெருலிக் அமிலம் உதவும்.
ஊட்டச்சத்துக்கள்: பாப்கார்னில் நிறைவுற்ற கொழுப்பு, சோடியம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பாப்கார்னின் அபாயங்கள்: பாப்கார்ன் பொதுவாக உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது சில நபர்களிடையே அபாயங்களை ஏற்படுத்தலாம்.
1. சில வகையான பாப்கார்ன்கள் - திரையரங்குகளில் விற்கப்படுவது மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் (மைக்ரோவேவில் செய்யக்கூடியவை) விற்கப்படுவது போன்றவற்றில் அதிக கலோரிகள், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சோடியம் ஆகியவை அதிகமாக இருக்கும். குறிப்பாக, அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற வகையான இதய நோய்கள் இருப்பவர்களுக்கு இவை ஏற்றதல்ல.
2. பாப்கார்ன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். ஏனெனில், அதன் வடிவம் மற்றும் அளவு இளம் குழந்தைகளில் காற்றுப்பாதைகளை எளிதில் தடுக்கும்.
3. வெண்ணெய் சுவையுடன் தயாரிக்கப்படும் பாப்கார்ன்களில் டயசெடைல் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம். இது மக்களுக்கு கடுமையான நுரையீரல் நோய்களைக் கொண்டு வரும். இந்த செயற்கை வெண்ணெய் சுவையுடன் செய்யப்பட்ட பாப்கார்னைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
4. சிலருக்கு செரிமானக் கோளாறு ஏற்படலாம். குடல் அழற்சி இருப்பவர்களுக்கு செரிமானப் பாதையில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
எனவே, காய்கறி, எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற இதயத்திற்கு ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பாப்கார்னை தயாரிக்கவும். மளிகைக் கடையில் மைக்ரோவேவ் பாப்கார்னைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக ஆர்கானிக் பாப்கார்ன் வாங்கவும். திரையரங்குகளில் பாப்கார்னை மிகச் சிறிய அளவில் உண்ணவும்.