அஸ்வகந்தா என்பது மிகவும் பிரபலமான ஒரு மருத்துவ மூலிகையாகும். நம் நாட்டின் ஆயுர்வேத சிகிச்சையில் ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க அஸ்வகந்தா பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா, பொடி மற்றும் காப்ஸ்யூல்கள் வடிவத்தில் கிடைக்கின்றன. அஸ்வகந்தாவுக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல்வேறு வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. அஸ்வகந்தாவின் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அஸ்வகந்தாவின் அற்புத நன்மைகள்:
1. இருதய சிக்கல்களைக் குறைக்கிறது: அஸ்வகந்தா ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளதால் உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதயத் தொடர்பான பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
2. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கிறது: அஸ்வகந்தாவை தவறாமல் பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளே இதற்கு காரணமாகும்.
3. தைராய்டை கட்டுப்படுத்துகிறது: தைராய்டு சிகிச்சையில் அஸ்வகந்தா முக்கிய பங்கு வகிக்கிறது. இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தி தைராய்டு சுரப்பியுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்கிறது.
4. மன அழுத்தத்தை நீக்குகிறது: அனைவரும் தம் அன்றாட வாழ்க்கையில், ஏதேனும் ஒரு காரணத்தினால் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறோம். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.
5. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது: அஸ்வகந்தா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக சளி மற்றும் இருமல் பிரச்னை விரைவாக நீங்குகிறது.
6. கண்புரைக்கு சிகிச்சையளிக்கிறது: கண்புரை நோயை எதிர்த்துப் போராடும் சக்தி அஸ்வகந்தாவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
7. சரும அழகை மேம்படுத்துகிறது: இது சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சருமம் புத்துயிர் பெறுகிறது. இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது. சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும், வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
8. முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது: முடி உதிர்தல் பிரச்னையை சமாளிக்க அஸ்வகந்தா மிகவும் முக்கியமான மூலிகையாகக் கருதப்படுகிறது. இது மெலனின் இழப்பிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்னையை குறைக்கிறது.
யாரெல்லாம் அஸ்வகந்தாவை உட்கொள்ளக் கூடாது?
1. இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். இது தவிர, இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்ளும் நபர்களுக்கு காய்ச்சல், சோர்வு, உடல் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
3. நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் நீரிழிவு நோய்க்கான ஆங்கில மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தால், அஸ்வகந்தாவை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில், இவற்றின் கலவை உடலில் இரத்த அளவைக் குறைக்கிறது.