தொப்பையை குறைப்பதற்கு பல வீட்டு வைத்திய முறைகள் இருந்தாலும், அதில் பலர் கவனத்தை ஈர்த்த ஒன்றுதான் வெந்நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிப்பது. இந்த அற்புதமான பானம் தொப்பையைக் கரைக்கும் என்று பலரால் நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மையா? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெந்நீர் நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. இது நம் உடல் வெப்பநிலையை அதிகரித்து கலோரிகளை எரிக்க உதவும். மேலும், வெந்நீர் குடிப்பது நம் உடலில் உள்ள தசைகளுக்கு இறுக்கத்தை நீக்கி, நல்ல உறக்கத்திற்கு உதவும்.
எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொழுப்பை எரிக்கவும் உதவும். எலுமிச்சை சாறு செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவும். தேனில் பலவகையான விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது.
வெந்நீரில் எலுமிச்சை, தேன் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
வெந்நீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து குடிப்பதால் செரிமானம் மேம்பட்டு உணவு எளிதாக ஜீரணமாக உதவும். எலுமிச்சை சாறு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சுத்திகரிக்கும். மேலும், எலுமிச்சை சாறு, தேனில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். எனவே, இதை காலையில் எழுந்ததும் பருப்புவது நல்லது.
எலுமிச்சை சாறு அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் இது பற்களின் எனாமலை பாதிக்கலாம். எனவே, இந்த பானத்தை குடித்த பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். தேனில் சர்க்கரை அதிகம் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இந்த பானத்தை குடிப்பதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு தேன் அலர்ஜி இருக்கும். அத்தகையவர்கள் தேன் கலந்த பானத்தை குடிப்பதை தவிர்க்கவும்.
தொப்பை குறையுமா?
வெந்நீரில், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும், அதனால் மட்டுமே தொப்பை முழுமையாகக் கரைந்துவிடும் என சொல்ல முடியாது. தொப்பையை கரைப்பதற்கு ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மிகவும் முக்கியம். இவற்றை நீங்கள் முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே, தொப்பையை கரைக்க முடியும். அதை விட்டுவிட்டு, இந்த ஜூஸ் மட்டும் குடித்து உடல் எடையை குறைக்க நினைத்தால், நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்காது.