இன்றைய காலகட்டத்தில் நமக்கு வரும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது சுகாதாரமற்ற உணவுகள்தான். முதல் நாள் சமைத்ததை அடுத்த நாள் சூடுபடுத்தி சாப்பிட்டு அதன் மூலம் பல்வேறு நோய்களை உண்டாக்கிக் கொள்கிறோம். அந்த வகையில், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது ஏற்படும் விளைவுகளை அறிந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முட்டை: முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு என்பதால் வயது பாகுபாடின்றி அனைவரும் உண்கிறோம். முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது. வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால் அது விஷமாக மாறி செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஒரு முறை வேகவைத்த முட்டையை அன்றே உண்பது ஆரோக்கியமானது.
உருளைக்கிழங்கு: வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் விரும்பி உண்பது உருளைக்கிழங்கு. இதை ஒருமுறை வேகவைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், அது மிகப்பெரிய தவறு. ஆம், சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விடும் வாய்ப்புள்ளதால் இது நச்சுத்தன்மை உள்ளதாக மாறிவிடும். இவற்றை உணவாகப் பயன்படுத்தினால் வாந்தி, குமட்டல் ஆகிய உடல் நல பாதிப்பு ஏற்படும்.
கோழி இறைச்சி: கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே, புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும், சூடுபடுத்தும்போது இதிலுள்ள புரதச்சத்து அதிகரிக்கும். இரண்டாவது முறை சூடுபடுத்தி சாப்பிட்டால் அதுவே உடல் நலம் கெடுக்கும் நஞ்சாக மாறி விடும். எனவே, ஒரு முறை சமைத்த இறைச்சியை சூடாக உடனே சாப்பிடுவது நல்லது.
கீரை வகைகள்: உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பெருகியதால் கீரை நம் உணவில் அதிகம் இடம்பெறுகிறது. கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் இருப்பது அறிவோம். இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது என்கிறது ஆராய்ச்சி. மேலும் கீரைகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகளை உண்டாகும்; குடல் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சமையல் எண்ணெய்கள்: தற்போது உடல் நலனை முன்னிட்டு ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் பலர் பயன்படுத்தத் துவங்கி விட்டனர். இவற்றை மீண்டும் சூடுபடுத்தி சமைத்தால் தீமைகள் இல்லை என்ற தப்பான புரிதல் வேறு. எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்துவது முற்றிலும் தவறு. அப்படிச் செய்யும்போது அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, புற்றுநோய், இதய நோய்கள் போன்றவை ஏற்படும் அபாயமுண்டு.
மேலும், புரோட்டீன் அதிகமுள்ள காளான், அரிசி சாதம், நைட்ரேட் அதிகமுள்ள பீட்ரூட் போன்றவற்றையும் சமைத்தவுடன் சாப்பிடுவதே சிறந்தது. இல்லையெனில் அவை நச்சுப்பொருளாக மாறி, நம் உடல் நலத்துக்கு வேட்டு வைப்பது உறுதி. எந்த உணவாக இருந்தாலும் சமைத்த உடனே சாப்பிடுவது ஆரோக்கியம் காக்கும்.