நமது முன்னோர்கள் அதிகாலை எழுந்து கம்மஞ்சோறு, ராகி களி உண்டு நோய் என்றால் என்னவென்பதை அறியாமல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். அடுத்தடுத்த தலைமுறைகள் மாற்றம் கண்ட உணவு முன்னேற்றங்களினால் அரிசி சோறும் இட்லி, தோசையும் பழக்கமானது. அதிலும் பழைய நீராகாரம் சாப்பிட்டு உழைத்து ஆரோக்கியமான வாழ்ந்தார்கள்.
தற்போதைய உணவுக் கலாசாரத்தில் மேலைநாட்டு துரித உணவுகளும் வடநாட்டு கோதுமையும் அதிகம் இடம்பிடித்துள்ளதை அறிவோம். அதிலும் பெருகி வரும் நீரிழிவு பாதிப்புள்ளவர்களும் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் பெரும்பாலும் சப்பாத்தி சாப்பிடுவது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது எனலாம்.
நம் தமிழகத்தில் உணவில் முக்கியமாக அரிசியில் இல்லாத எது கோதுமையில் உள்ளது? கோதுமையில் உள்ள செலினியம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை சுத்தப்படுத்தவும் இது உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை, செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ஒருவர் மூன்று வேளையும் கோதுமை உணவுகளை எடுத்துக்கொண்டால், அவரது உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. கோதுமை உணவு உட்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து கழிவுகளை நீக்கி வயிறு மற்றும் குடலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
சரி, கோதுமையினால் தீமைகள் ஏதும் இல்லையா என்றால், இருக்கிறது. அரிசியுடன் ஒப்பிடும்போது கோதுமை ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். சிலருக்கு கோதுமை செரிமானம் ஆகாமல் மந்தநிலை, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக, குளூட்டன் அலர்ஜி உள்ளவர்களும் வயிறு பிரச்னை இருப்பவர்களும் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களை தவிர்ப்பது நல்லது.
கோதுமை எப்படி நம்மை அடிமையாக்கி உள்ளது என்பதைப் பற்றியும் அதிலுள்ள தீமைகள் பற்றியும் இதய நோய் நிபுணரும், ஆரோக்கிய விழிப்புணர்வு தரும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியவருமான வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்கர் எழுதிய 'Wheat Belly’ என்ற புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டு, விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது. இதன் மையக் கருத்து என்ன தெரியுமா? கோதுமை ஒரு விஷம் என்பதே.
‘‘இதய நோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சைகளை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துயரங்களைப் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டிருக்கிறேன். அதனால், இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தேன். முக்கியமாக, என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப் பெரிய துக்கத்தைக் கொடுத்தது.
கடந்த 15 வருடங்களாக இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானதுதான் நான் எழுதிய ‘Wheat belly’ எனும் புத்தகம்” என்று தனது புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ். Wheat Belly உண்மையில் மரபணு டிங்கரிங் மூலம் பொதுமக்களுக்கு 'கோதுமை' என விற்கப்படுவதால் ஏற்படும் தீங்கான விளைவுகளை எடுத்துரைத்து கோதுமை பற்றிய பெரிய மாயையை உடைத்திருக்கிறது. இதனால் கோதுமையை அதிகம் விரும்பும் நாம்தான் விழிப்புணர்வு பெற வேண்டும்.
குளூட்டனை தவிர Gliadin, Amylopectin என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கின்றன. வட இந்தியாவில் கோதுமையை பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தட்ப வெப்ப நிலையையும், மரபணுக்கள் அமைப்பையும் பொறுத்தது. அந்தந்த நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.
தென்னிந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு நாம் விளைவிக்கும் அரிசி உணவுகளே ஆரோக்கியமானவை. அரிசி உணவுடன் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளும் சமச்சீர் உணவின் ஊட்டச்சத்துடன் மற்ற எவற்றையும் ஒப்பிட முடியாது. ஆனால், நவீன மாற்றத்தின் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைத்தான் நாம் தவிர்க்க வேண்டும். தீட்டப்படாத அரிசி உணவை எடுப்பது நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
கோதுமையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம், அதன் நார்ச்சத்து காரணமாக சப்பாத்தியைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சாப்பிட முடியும் என்பதுதான். அரிசி உணவாக இருந்தாலும் கோதுமை என்றாலும் மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் நலமே.