Vegan Diet Img Credit: Freepik
ஆரோக்கியம்

வாழ்வில் சிறக்க 'வீகன் டயட்'!

கண்மணி தங்கராஜ்

பிரபலமான உணவு முறைகளில் ஒன்றான 'வீகன் டயட்' குறித்த விளக்கமும், அதன் பலன்கள் மற்றும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்த விளக்கமான பதிவு பின்வருமாறு...

வீகன் டயட் என்றால் என்ன?

வீகன் டயட் என்பது தற்போது அதிகமான மக்கள் பின்பற்றும் ஒரு சைவ உணவு முறையாகும். இந்த ‘வீகன்’ என்ற சொல்லானது முதன்முதலில் 1944 இல் ‘டொனால்ட் வாட்சன்’ என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த உணவு முறையில் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றையும், பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் தவிர்த்துவிட்டு, முற்றிலும் தாவரங்களை மட்டுமே அருந்தக்கூடிய அதிதீவிரமான சைவ உணவு முறை ஆகும். குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் வீகன் டயட் சார்ந்த உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

உடல் எடையைக் குறைக்க வீகன் டயட் சரியானதாக இருக்குமா?

இந்த உணவு முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் நம்முடைய உடல் எடையானது குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இறைச்சியிலிருந்து காய்கறி அடிப்படையிலான உணவுக்கு மாறும்போது, உடல் எடை அதிகமாகும்  அபாயம் தானாக குறைகிறது. பொதுவாகவே சைவ உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வயிற்றை அதிக நேரம் நிரம்ப வைக்கும்.அடிக்கடி சாப்பிடுவதைத் தடுக்கும். தின்பண்டங்கள் மீதான ஆசையை குறைத்து உடலின் எடையை குறைக்க உதவும்.

'வீகன் டயட்'  முறை புற்றுநோய் வராமல் தடுக்குமா?

சோயாபீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை நாம் நம்முடைய  உணவில் சேர்ப்பது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சராசரியாகவே ஒரு சைவ உணவில் பெரும்பாலும் சோயா பொருட்கள் உள்ளன. இவை மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

இதய ஆரோக்கியத்திற்கு வீகன் டயட் எந்தளவில் பங்களிக்கிறது?

வீகன் டயட் உயர் இரத்த அழுத்த அபாயத்தை கிட்டத்தட்ட 75% வரைக் குறைக்கிறது. எனவே வீகன் டயட் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும் என பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மனஅமைதி மற்றும் சருமப்பொலிவுக்கான சிறந்த தீர்வு!

இந்த டயட் முறை உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. வீகன் டயட் பின்பற்றுபவர்களைக் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது அசைவ உணவு சாப்பிட்டவர்களை விட சைவ உணவு சாப்பிட்டவர்களின் மனநிலை மேம்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த டயட் முறை நம்முடைய சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பால் சார்ந்த பொருட்களை முழுவதுமாக தவிர்ப்பதால் பருக்கள் வருவது குறைக்கப்படும். இதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொள்வதால் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் விட்டமின்கள் போன்றவை அதிகமாகி  சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.

சமைக்காமல் எடுக்கப்படும் வீகன் டயட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

சமைக்காமல் எடுக்கப்படும் வீகன் டயட் மூலம்  இதய நோய், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும், ஹோமோசைஸ்டீன் அளவை அதிகரிக்கும் வாய்ப்பும், இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல 45 வயதிற்குட்பட்ட பெண்களில் 30% பேர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக சமைக்காத வீகன் டயட்டை பின்பற்றியதால் மாதவிடாய் சுழற்சியில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தாவர அடிப்படையிலான உணவை உண்ணுவது ஆரோக்கியமான உடலுக்கு நல்லதுதான். ஆனால் மிகுந்த கவனத்தோடு அதனை பின்பற்றுவதும் அதைவிட மிக முக்கியமாகும். இல்லையேல், அது நம்முடைய  உடல்நலத்திற்கு பெரிய ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT