பொதுவாக, நம் உடல் தசைகள் தன்னிச்சையாக சுருங்கி ஓய்வெடுக்க முடியாதபோது தசைப்பிடிப்புகள் (cramps) ஏற்படுகின்றன. கிராமங்களில் இதை, ‘குரக்களி பிடித்துக் கொள்ளுதல்’ என்று சொல்வார்கள். தொடைகள், காலின் பின்புறப் பகுதி, கைகள், கால்கள், வயிறு, சில சமயம் விலா எலும்புக்கூடு போன்ற பகுதிகளில் தோன்றும். இது யாருக்கு வேண்டுமானாலும் வரும். நடக்கும்போது, அமரும்போது, வாகனங்களில் ஏறும்போது வரும். ஆனால், அதிகமாக இரவு தூக்கத்திலும், தூங்கி எழும்போதும் வரும்.
தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது திடீரென்று கெண்டைக்கால் தசை இழுத்துப் பிடிக்கும். அந்த இடத்தில் தசை சுருண்டு சதை மிகுந்த வலியை தரும். அறுபது சதவிகித மக்களுக்கு இந்த பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. சில நிமிடங்களுக்கு பின்பு அது சரியாகிவிடும் என்றாலும் தூக்கத்தை இது தொந்தரவு செய்கிறது.
இந்த வலி வரும்போது படுத்தவாறே, காலை நன்றாக நீட்டி கை விரல்களால் காலின் விரல்களை இழுத்துப் பிடித்து மேல்நோக்கி வைத்திருந்தால், விரைவிலேயே சுருண்டு இருந்த தசை மெல்ல மெல்ல விடுபட்டு இரண்டு மூன்று நிமிடங்களில் சரியாகிவிடும்.
இரவு நேரத்தில் வரும் தசைப்பிடிப்பிற்கான காரணங்கள்:
1. நீண்ட நாட்கள் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு வரும்.
2. கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும். இவர்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதும், கால்சியம், சோடியம், மெக்னீசியம் சத்து குறைபாடும் காரணம்.
3. உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதும் ஒரு காரணம். உடல் எடைக்குத் தகுந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
4. நிற்கும்போது தரையில் இரண்டு கால்களையும் சரியாக ஊன்றாமல், ஒற்றைக் காலில் நிற்பது. பெண்கள் சமையல் செய்யும்போது ஒரு பக்கமாக சாய்ந்து நின்று கொள்வார்கள். அவர்களுக்கு அவசியம் இந்த இரவு நேர கிராம்ஸ் வரும். பள்ளி, கல்லூரிகளில் நீண்ட நேரம் நின்று கொண்டு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், துணி, நகைக் கடைகளில் வேலை செய்யும் சேல்ஸ் மேன், சேல்ஸ் உமன் ஆகியோருக்கு வரும்.
6. ஜிம் அல்லது வீட்டில் நிறைய நேரம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கூட இந்த கிராம்ஸ் வரும். அவர்களுடைய தசைகள் மிகுந்த களைப்படைவதன் காரணமாக இது வருகிறது.
7. மது அருந்துபவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வருகிறது.
இதை எப்படி சரி செய்யலாம்?
1. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் நீர்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளவேண்டும். வேலைக்குச் சென்றாலும், பிரயாணத்தில் இருந்தாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.
2. கை, கால்களை நன்றாக நீட்டி யோகா பயிற்சி செய்ய வேண்டும். தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கை, காலை நீட்டி சில பயிற்சிகளைச் செய்யலாம்.
3. இரவு நேரத்தில் ஒரு குளியல் போடுவதும் இந்த வலி வராமல் தடுக்கிறது. சிறிதளவு எப்சம் உப்பை பக்கெட் தண்ணீரில் கரைத்து விட்டு குளிக்கவும். எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் சல்பேட் கிராம்ஸ் குறைபாட்டை நீக்குகிறது.
4. படுக்கையில் அமர்ந்து கால்களை மென்மையாக நீவிக் கொடுக்க வேண்டும். நமது கால்கள் நன்றாக ரிலாக்ஸ் ஆனால் இந்த வலி வருவதில்லை.
தினமுமே தொடர்ந்து கெண்டைக்கால் சதை பிடிப்பு வந்தால் அவசியம் மருத்துவரை கலந்த ஆலோசிப்பது மிகவும் முக்கியம்.