What is a stroke? How to prevent it Getty Images
ஆரோக்கியம்

ஸ்ட்ரோக் என்றால் என்ன? அதைத் தடுப்பது எப்படி?

ஜெயகாந்தி மகாதேவன்

ஸ்ட்ரோக் என்பது தமிழில் பக்கவாதம் எனப்படும். மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாய், மூளைக்கு சத்துக்கள் சரிவர சென்றடையாமல் உடலின் சில உறுப்புகள் செயலிழந்துபோகும். அடைப்பை சரி செய்ய மருத்துவத்தில் இடமுண்டு என்றாலும், அப்படிப்பட்ட உடல்நலக் குறைபாடுகள் வராமல் தடுப்பதே முழுமையான ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும். நம் மூளையானது எப்பொழுதும் ஆரோக்கியமுடன் செயல்பட பின்பற்ற வேண்டிய வாழ்வியல் முறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

நாம் செய்யும் தொடர் உடற்பயிற்சியானது நம் உடம்புக்கு மட்டுமின்றி, மூளைக்கும் சுறுசுறுப்பு தர வல்லது. உடற்பயிற்சி செய்வதால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் சீராகிறது. இரத்த அழுத்தம் சம நிலைப்படும். உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படும். வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் நீச்சல், சைக்ளிங், வேக நடை போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுவது அவசியம்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியம் ஆகியவற்றுடன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளாகிய சால்மன், டிரௌட் மீன்கள், பிளாக்ஸ் சீட்ஸ், வால்நட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கொட்டைகள் சேர்த்த சரிவிகித உணவை தினசரி உண்பது அவசியம். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது வீக்கத்தைக் குறைத்து, ஸ்ட்ரோக் வரும் அபாயத்தையும் தடுக்கும்.

ஸ்ட்ரோக் வருவதற்கு உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணியாகிறது. உப்பு, எண்ணெய், ஆல்ஹகால் போன்றவற்றை உட்கொள்ளும் அளவைக் குறைத்தும், தொடர் உடற்பயிற்சியின் மூலமும் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த முடியும். தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வதும் அவசியம்.

நீரிழிவு நோயும் இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து ஸ்ட்ரோக் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கக் கூடியது. ஆரோக்கியமான உணவு முறை, தொடர் உடற்பயிற்சி, மருத்துவ உதவி ஆகியவற்றின் மூலம் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைப்பது அவசியம்.

புகை பிடித்தல் ஸ்ட்ரோக் வருவதற்கான மிக முக்கிய காரணியாகக் கூறப்படுகிறது. புகையிலையில் கலந்துள்ள இரசாயனங்கள் இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த அழுத்தத்தை உண்டுபண்ணவும், அடைப்பு ஏற்படவும் காரணமாகின்றன. முழுமையான உடல் ஆரோக்கியத்திற்கும் ஸ்ட்ரோக் வரும் அபாயத்தை தடுக்கவும் புகைப் பழக்கத்தை விட்டொழிப்பது முதல் படியாகும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் குடியை அறவே விட்டுவிடுதல் நலம். முடியாத பட்சத்தில் ஒரு நாளைக்கு ஒருமுறை என அளவை குறைத்துக் கொள்ளலாம்.

ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு இரவில் 7 முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். தேவையான அளவு தண்ணீர் பருகி உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். நீரின் அளவு குறையும்போது இரத்தம் கெட்டியாகி அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

தொடர் மன அழுத்தமும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பை அதிகரிக்கும். நண்பர்கள், குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பது, யோகா மற்றும்  தியானம் பண்ணுவது போன்றவற்றில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைக்க முயல்வது அவசியம்.

ஸ்ட்ரோக் வர முக்கியக் காரணிகளாக விளங்கும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் ஆகியவற்றை குணப்படுத்த, குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத்துவரை கலந்தாலோசித்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்துக்கொண்டால் பக்கவாதமின்றி 'பக்கா'வான வாழ்க்கையைத் தொடரலாம்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT