நாம் வாழும் சுற்றுச்சூழலில் பல வகையான செடி, கொடி, மரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டவை. இதை அறிந்த நம் முன்னோர்கள், பல நோய்களுக்கும் எந்த மூலிகையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் எந்த மூலிகை எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது என குறித்து வைத்துள்ளனர். அதை பின்பற்றி அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை காத்து வந்தார்கள்.
இந்த நவீன காலத்தில் நம்முடைய உணவு பழக்க வழக்கம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் அதற்கேற்ப மருத்துவமும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில், நம்மை சுற்றியிருக்கும் அல்லது சிறுவயதில் நாம் பார்த்த செடிகளின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. நாம் இந்த பதிவில் குரங்கு வெற்றிலை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
குரங்கு வெற்றிலை கிராமப்புறங்களில் அதிகம் காணப்படும் ஒரு புதர் வகையான செடியாகும். இது வறண்ட இடங்களில் காணப்படும். தற்போது இந்த வகையான செடி அதிகமாக சீனாவில் காணப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (Carmona retusa) என்று கூறுவார்கள். இந்த செடி இந்தியா, இலங்கை போன்ற வெப்பமண்டல காலநிலை உள்ள இடங்களில் காணப்படும். சமீப காலங்களாக சீனாவில் பிரபலமடைந்து வருகிறது. இது 1 முதல் 4 மீட்டர் உயரம் வளர கூடிய செடியாகும்.
கிராமப்புறங்களில் இந்த செடியை குரங்கு வெற்றிலை அல்லது குருவி வெற்றிலை என்று அழைப்பார்கள். கிராமப்புறங்களில் வளர்ந்த பிள்ளைகள் இந்த குருவி வெற்றிலையை பறித்து அதனுடன் கிளுவை மரத்தின் கொழுந்தை வைத்து மெல்லுவார்கள். அப்போது வாயில் வெற்றிலை, சுண்ணாம்பு வைத்து மென்றால் எவ்வாறு நாக்கு சிவக்குமோ அதே போல மாறிவிடும். இதன் பழங்கள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாப்பிடுவதற்கு இனிப்பாக இருக்கும்.
இதன் மருத்துவ பயன்கள்:
இந்த பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. வயிற்றுப் பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது.
ஒவ்வாமை, பெருங்குடல், இருமல், வயிற்றுப்போக்கு, நீரிழிவு, இரைப்பை குடல் அழற்சி, அரிப்பு, சிரங்கு, தோல் நோய்கள், வீக்கம், வயிற்றுப் பிரச்சினைகள், புற்று புண்கள், ஆகிய நோய்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
இந்த குரங்கு வெற்றிலையில் ரோஸ்மரினிக் அமிலம் (Rosmarinic acid) உள்ளது. இது ஒவ்வாமை பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும்.
இதன் இலைகளை பறித்து நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு கிராம்பு மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துகொண்டு, இந்த பொடியை தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் வலிமை பெறும். பற்களில் இருந்து வந்த இரத்த கசிவு நின்றுவிடும்.
மேலை நாடுகளில் இந்த இலையை தேநீர் செய்து குடிப்பார்கள். குரங்கு வெற்றிலை சிறிதளவு, இஞ்சி துண்டு சிறிதளவு, பனங்கற்கண்டு அகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குரங்கு வெற்றியிலை செடியின் வேர் மற்றும் குப்பை மேனி செடியின் வேர், 7 மிளகு ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ஏதாவது விஷ பூச்சிகள் கடிக்கும் போது நீரில் காய்ச்சி குடிக்கலாம் அல்லது வெற்றிலையில் வைத்து மென்று தின்று வர விஷ முறிவு ஏற்படும்.