மழை மற்றும் குளிர் காலம் தொடங்கி விட்டது. இந்த சூழலில் நோய் தொற்றுகளிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அவசியம். அன்றாட நிகழ்வுகளில் உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த உதவும் சில விஷயங்களைப் பார்ப்போம்.
காலை 8 மணிக்கு நல்ல சத்தான காலை உணவை எடுத்துக்கொள்ளுங்கள் (இட்லி மற்றும் சிறுதானிய சிற்றுண்டிகள்). அது உங்கள் இரத்தத்தில் உள்ள, ‘காமா' ஆற்றலை அதிகரிக்கச்செய்து உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலான ஆண்டி வைரலை 45 சதவீதம் உயர்த்துகிறது என்கிறார்கள் நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
காலை 9 மணிக்கு வைட்டமின் சி உள்ள மூலிகைகள் அல்லது சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, பெர்ரி) ஏதேனும் ஒன்று. முடியாதபட்சத்தில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் 86 சதவீதம் சளி தொந்தரவுகள் குறையும் என்கிறார்கள் லாசென்ட் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
காலை 10 மணிக்கு சிறிது நேரம் பரபரப்பாக இயங்குங்கள். அந்த சிறிது நேர பதற்றம் உங்கள் உடலில், ‘கார்டிசால்' ஹார்மோனை சுரக்கச்செய்து உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதனுடன்போராடச் செய்கிறது. இது உடலுக்கு பயிற்சியாகிறது என்கிறார்கள் லாம்பார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
காலை 11 மணிக்கு வீட்டிலோ, அலுவலகத்திலோ சுறுசுறுப்பாக இந்த நேரத்தில் செயல்படுங்கள். அது உங்கள் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கச்செய்து நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துகிறது என்கிறார்கள் மாசேசெட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர்களுக்கு 25 சதவீதம் நுரையீரல் பிரச்னைகள் வருவதில்லை என்கிறார்கள்.
மதியம் 1 மணிக்கு நல்ல புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் (பயறுகள் மற்றும் பருப்புகளையும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்). புரோட்டீன் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்து மட்டுமல்ல, ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும் உணவு.
மதியம் 3 மணிக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி வைரஸை கொல்லும் க்ரீன் டீ ஒரு கப் சாப்பிடுங்கள் என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். க்ரீன் டீயில் உள்ள, ‘ஆடோன் வைரல்' எனும் சத்து நேரடியாக இரத்தத்தில் கலந்து வைரஸ் கிருமிகளை அழிக்கும் என்கிறார்கள்.
மாலை 6 மணிக்கு மேல் உங்கள் உடலை வெதுவெதுப்பான நிலையில் வைக்க உதவும் கம்பளி மற்றும் கதகதப்பான உடைகளை அணியுங்கள் என்கிறார்கள் கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இவர்கள் இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு அவசியம் 12 மணி நேரம் உங்கள் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுங்கள் என்கிறார்கள்.
இரவு 9 மணிக்கு நோய் எதிர்ப்பு சக்தி பானம் ஏதேனும் குடியுங்கள். இது ஆற்றல் மிக்க நோய் எதிர்ப்பு பானம். ஒரு கப் தேங்காய் பால் அல்லது பாதாம் பால் எடுத்து அதனை இளம் சூடாக்கி அதனுடன் பிரஷ்ஷாக அரைத்த மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், பட்டை தூள் கால் டீஸ்பூன், இஞ்சி தூள் (1 துண்டு மசித்தது) - கால் டீஸ்பூன், மிளகு தூள் - கால் டீஸ்பூன், அண்ணாசிப்பூ ஒன்று சேர்த்து கலக்கவும். பின் அதை இலேசாக சூடுபடுத்தி குடிக்கும் நிலையில் இனிப்புக்காக தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சூடாகப் பருகவும். இந்த பானத்தை இரவில் இளம் சூட்டில் பருகி வர, நோய் தொற்றுகளிலிருந்து விடுபடலாம் . இதை சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் பருகலாம்.
இரவு 10 மணிக்கு உறங்கச் செல்வது அவசியம். 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதுதான் உங்கள் நோய் ஆற்றலை அதிகரிக்கச்செய்யும் எளிய வழி என்கிறார்கள் லக்சம்பெர்க் பல்கலைக்கழக தூக்க ஆராய்ச்சி ஆய்வாளர்கள்.