நான்சி மலர்
செல்வி ஜெ.ஜெயலலிதா - திரைத்துறையிலும், அரசியலிலும் தன்னுடைய திறமை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். தமிழ் திரையுலகின் 'வசூல் ராணி' என்று அழைக்கப்படும் ஜெயலலிதா அவர்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஜெயலலிதா 1965-ஆம் ஆண்டு 'வெண்ணிற ஆடை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவரது தாயார் சந்தியா அவர்களும் ஒரு புகழ்பெற்ற நடிகை. தனது தாயாரின் விருப்பத்திற்காகவே மிக இளம் வயதிலேயே (15 வயது) நடிக்கத் தொடங்கினார்.
தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படுவது எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து 28 திரைப்படங்களில் நடித்துள்ளனர். 'ஆயிரத்தில் ஒருவன்' இவர்களது கூட்டணியில் வந்த மெகா ஹிட் படம்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 140-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த பாடகியாகவும் திகழ்ந்தார். 'அடிமைப் பெண்' படத்தில் இவர் பாடிய "அம்மா என்றால் அன்பு" பாடல் இன்றும் மிகவும் பிரபலம்.
தமிழ் சினிமாவில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் நவீன ஆடைகளை அறிமுகப்படுத்தி, அன்றைய காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார்.
ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும், அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த "வசூல் ராணி"யாகவும் (Box Office Queen) வலம் வந்தார்.
கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்கிற்காகத் தமிழக அரசு இவருக்கு 'கலைமாமணி' விருது வழங்கி கௌரவித்தது.
மிகத்தெளிவான தமிழ் உச்சரிப்பும், கணீர் என்ற குரலும் இவரது மிகப்பெரிய பலம். எப்பேர்ப்பட்ட கடினமான வசனங்களையும் எளிதாகப் பேசி அசத்துவார்.
மிகக் குறுகிய காலத்திலேயே 100 படங்களைக் கடந்த சாதனையாளர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடின.
திரைப்படத் துறையில் இருந்த மிகச்சில படித்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளை சரளமாகப் பேசும் திறன் கொண்டவர்.
சினிமாவில் இருந்தபோதே 'கல்கி' உள்ளிட்ட வார இதழ்களில் கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். வாசிப்புப் பழக்கம் இவரிடம் மிக அதிகம்.