கோவீ.ராஜேந்திரன்
அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கும் மகாத்மா காந்திக்கு உலக நாடுகள் அவரின் சிலைகளை வைத்து அவரை பெருமைப்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் உள்ள முக்கியமான மகாத்மா காந்தி சிலைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
காந்திஜிக்காக முதன் முதலில் சிலையை நிறுவிய வெளிநாடு, கென்யா. அந்நாட்டின் நைரோபியில் உள்ள கென்யா ராயல் தொழில்நுட்ப கல்லூரியில் 1956 ம் ஆண்டு அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் டேவிஸ்டாக் சதுக்கம், என்ற அமைதிப் பூங்காவில் 1968 ம் ஆண்டு காந்திஜி சிலை நிறுவப்பட்டது. இந்த பூங்காவின் அருகில் உள்ள கல்லூரியில் தான் காந்திஜி 1968 ம் ஆண்டு சட்டம் பயின்று வந்தார்.
லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் தலைவர்களை கேலி செய்த பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலைக்கு அருகில் மகாத்மாவின் சிலை அமைக்கப்பட்டது.
வக்கீல் உடையில் மகாத்மாவின் சிலை இருக்கும் அவரின் இளம் வயது தோற்றமுடைய சிலையை, ஜோகன்ஸ்பர்க்கில் 2003 ம் ஆண்டு நிறுவியது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்கா பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில், காந்திஜி அவமானப்படுத்தப்பட்ட இடத்தில், 1996-ல் மண்டேலாவால் திறக்கப்பட்ட சிலை.
டென்மார்க்கில் 1984 ம் ஆண்டு நிறுவப்பட்டது காந்திஜி சிலை. இந்த சிலையை டென்மார்க்கிற்கு பரிசாக வழங்கியது அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள அரியானா பூங்காவில் (Ariana Park) மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை, அமைதி மற்றும் நட்புறவின் அடையாளமாக அமைந்துள்ளது.
மகாத்மா காந்தி மார்பளவு சிலையை ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரத்திற்கு இந்திய அரசு 2003 ம் ஆண்டு பரிசளித்தது. இந்த 42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவு சிலை மோட்டோயாசு நதியை ஒட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய இந்தியக் கம்யூனிட்டி சென்டரில் காந்திஜியின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை அனுசரிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு மகாத்மா காந்தி சிலை வழங்கப்பட்டு, ஆஸ்திரேலிய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் காந்திஜியின் புகழ்பெற்ற தண்டி யாத்திரை கோலத்திலான சிலை உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் ராணி சோபியாவால் இது திறந்து வைக்கப்பட்டது.