ஆலோவேரா – அறிந்ததும் அறியாததும்!

சேலம் சுபா

ஆலோவேரா (Aloe vera) என்று அழைக்கப்படும் கற்றாழையின் தாய் நிலம் ஆப்பிரிக்கா. இந்தியாவில், ராஜஸ்தான் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் சேலம் தூத்துக்குடி மாவட்டங்களிலும் அதிகம் வளர்க்கப்படுகிறது.

நமது ஆரோக்கியம் அழகுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இதில் அலோயின் (Aloin) ஆலோசான் போன்ற வேதிப்பொருள்களும், இதன் இலைகளிலிருந்து கிடைக்கும் சாற்றில்  வேறு பல வேதிப்பொருள்களும் உள்ளன.

கற்றாழைச்செடிகள் இளம் பச்சை, அடர் பச்சை போன்ற நிறங்களில் வளர்ந்தாலும் இளம் செடிகளை விட முதிர்ந்த நிலையில் உள்ளவையே அதிக மருத்துவத்தன்மை கொண்டவை.

இவற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிற திரவத்தை மூசாம்பரம் என்றும் கரியபோளம் காசுக்கட்டி என்றும் பாரம்பர்ய இந்திய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்றாழையை ஆயுர்வேத மருத்துவத்தில் கன்னி, குமரி என்று அழைக்கின்றனர். சிறு கற்றாழை, பெருகற்றாழை, செங்கற்றாழை, கருங்கற்றாழை, பேய்க் கற்றாழை, வரிக் கற்றாழை  எனப்பல வகைகள் உள்ளன.

நாம் அன்றாடம் காணும் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டுக்கு உகந்தது. இதன் இலைக் கதுப்பு அதாவது ஜெல் மற்றும் வேர் ஆகியவைகளில் மருத்துவ பலன்கள் அதிகம்.

 இதன் முற்றிய இலைப்பகுதியைக் கீறி அதனுள் இருக்கும் வெண்ணிற சதைப் பகுதியை எடுத்து ஏழெட்டு முறை அதை நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும் .அப்போதுதான் அதன் கசப்புத் தன்மை நீங்கும்.

கற்றாழை ஜூஸை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் சேரும் நச்சுகள் வெளியேறி மலச்சிக்கல் உடல் உஷ்ணம் வயிற்றுப் பாதிப்புகள் போன்றவை சரியாகும்.

உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து அதீத உடல் எடையும் குறைந்து ஆரோக்கியம் மேம்படும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு நிவாரணி இது.

பிரசவத்தின் காரணமாக பெண்களின் தொடை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் ஏற்படும் வரித்தழும்புகளைப் போக்க இதன் சதையை எடுத்துத் தடவி  அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

சிறு வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிகள், குழந்தைக்குப் பால் தரும் பெண்கள், ஆகியோர் கற்றாழை உண்பதை தவிர்க்க வேண்டும். உடல் பாதிப்புள்ள பெரியோரும் மற்றோரும் தகுந்த மருத்துவர் பரிந்துரை பெற்றே இதை பயன்படுத்த வேண்டும்.