ஆர்.ஜெயலட்சுமி
முத்தை அதன் பரிமாணம், உருவம், ஒளி மற்றும் நிறம் இவற்றை வைத்து மதிப்பிட வேண்டும். பெரியதாகவும் உருண்டையாகவும் ஆழ்ந்த மிருதுவான ஒளியுடையதாகவும் சுத்தமான களங்கமற்ற நிறமுடையதாகவும் உள்ள முத்துகள் சிறந்தவையாக கருதப்படும்.
இளஞ்சிவப்பு, அதைத் தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் நிற முத்துகள், நீல நிறம் மற்றும் கிரீம் நிற முத்துகளை காட்டிலும் சிறந்தவை.
முத்துக்களை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அவை இயற்கையான நிறத்தை இழந்து விடும். ஒளியையும் பிரகாசத்தையும் சீக்கிரத்தில் இழந்துவிடும்.
ஒரு முத்தின் நிறத்தையும் ஒளியையும் இயற்கை வெளிச்சத்தில் பரிசோதிக்க வேண்டும். ஒரு முத்து உண்மையானதா அல்லது போலியா என்று கண்டறிய முத்தை தேய்த்து கண்டறியலாம் உண்மையான முத்து சொரசொரப்பாகவும் போலி வழுவழுப்பாகவும் இருக்கும்.
முத்துகளை எப்பொழுதும் பெயர் பெற்ற நிரந்தரமான ஒரு ஸ்தாபனத்தில் வாங்க வேண்டும். சூரிய வெளிச்சமும் சூடும் படும்படியாக வைக்கக்கூடாது.
மேக்கப் கிரீம், ஸ்ப்ரே பெர்ஃப்யூம் இவை படாதவாறு பாதுகாக்க வேண்டும்.
வியர்வைபட்டால் முத்துகள் ஒளி குறைவதால் ஒவ்வொரு முறை உபயோகித்த பின்னரும் ஒரு மிருதுவான, காய்ந்த துணியை கொண்டு துடைத்தல் வேண்டும்.
முத்துகளை சில்க் அல்லது நைலான் நூலினால் கோர்க்க வேண்டும். தங்க சங்கிலியில் கோர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கோர்த்த முத்துகளை பிரித்து மறுபடியும் கோர்க்க வேண்டும்.
மிட்டாய் கலர் காகிதத்திலோ வேறு எந்த விதமான வண்ணத் தாள்களிலோ இதை பத்திரப்படுத்தக்கூடாது. ஏனெனில் வியர்வை கசிவினாலும் ஈரக்கசிவினாலும் கலர் காகிதத்தின் நிறம் முத்தில் பரவி முத்தை பயங்கரமாக்கிவிடும்.
உங்கள் முக அலங்காரம் முடிந்த பின்னரே முத்து நகைகளை அணிய வேண்டும். காரணம் பவுடரும் தூசியும் சென்டில் உள்ள எண்ணெய் பசையும் முத்துக்கு பரம எதிரிகள் ஆகும்.
ஏ சி தியேட்டராக இருந்தாலும் நமக்கு புழுக்கம் ஏற்படத்தான் செய்யும். இந்த புழுக்கம் கூட முத்தை நிறம் மாற்றிவிடும். எனவே ஒவ்வொரு முறையும் வெள்ளை மஸ்லின் துணியினால் முத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
முத்தை நம் இஷ்டத்திற்கு வீட்டிலேயே சுத்தப்படுத்தக் கூடாது. நகை கடையில் கொடுத்துதான் சுத்தம் செய்யவேண்டும்.
முத்து கடையில் வாங்கும்போது விளக்கின் ஒளி முத்தின் மேல் நேராக படாத வகையில் உங்கள் முகத்தால் மறைத்துக் கொண்டு சுமார் ஆறு அங்குல இடை வெளியில் பிடித்துக்கொள்ளுங்கள். முத்தின் மேல் உங்கள் பிம்பம் தெளிவாக விழும். இதுதான் தரமான முத்தின் அடையாளம்.
முத்துகள் ஒரே சீரான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் பளபளப்பு அதிகரிக்கும்.
பெரிய முத்துகளை வாங்குவது நல்லது. முதன் முறையாக முத்து அணிபவர்கள் திங்கட்கிழமையன்று அணிவது மிகவும் முக்கியமாகும்.