ஆர்.ஐஸ்வர்யா
நடுத்தர வயதில் நரைக்கத் தொடங்கியதும் பலரும் ரசாயனங்கள் கலந்த செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துகிறார்கள். அது தலைமுடிக்கு கேடு விளைவிப்பதுடன் உடல் நலத்திற்கும் ஏராளமான தீங்கை தருகிறது. அதற்கு பதிலாக தலைமுடியை இயற்கையாகவே கருமையாக்க உதவும் சில வழிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
காபித்தூள்: காபியில் டானின்கள் மற்றும் நிறமிகள் நிறைந்துள்ளன அவை முடிக்கு பழுப்பு நிறத்தை சேர்க்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் காபிப் பொடியை போட்டு தண்ணீர் நன்றாக சுருங்கும் வரை காய்ச்சி அதை குளிர வைத்து வடிகட்டி தலைமுடியில் தடவும். ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை அலசவும்.
கருப்பு தேநீர்: இதில் உள்ள டானின்கள் முடியை இயற்கையாகவே கருமையாக்கும். மேலும் தலைமுடிக்கு பளபளப்பை சேர்க்கும்.
டீ தூள்: ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் டீத் தூளைப் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.
மருதாணி: மருதாணி ஒரு இயற்கையான நிறமூட்டியாகும். இது தலைமுடிக்கு சிவப்பான அல்லது பழுப்பு நிறத்தை சேர்க்கும்.
மருதாணியை அம்மியில் அல்லது மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து தலைமுடியில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து அலசவும். தலைமுடி செம்பழுப்பு நிறத்தில் மாறியிருக்கும்
ஆம்லா: ஆம்லாவில் விட்டமின் சி அதிகமுள்ளது. இது காலப்போக்கில் முடியை கருமையாக்கும் மற்றும் அதை பலப்படுத்தும் திறனும் அதிகம்.
நெல்லிக்காயை பொடியாக்கி தண்ணீரில் கலந்து ஒரு பேஸ்ட் போல உருவாக்கி தலையில் தடவலாம். இல்லையென்றால் நெல்லிக்காயை சின்ன சின்னதாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டை உருவாக்கி தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
ரோஸ்மேரி: ரோஸ்மேரியும் முடியை கருமையாக்கும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தரும். ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறியதும், அந்த திரவத்தை தலையில் தடவிக் கொள்ளவும்.
இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் தலைக்கு குளித்தால் போதும்.ரோஸ்மேரி நீரை உச்சந்தலையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் அதிக பளபளப்பு குறைந்த முடி உதிர்தல் மற்றும் சிறந்த முடி வளர்ச்சி தரும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வால்நட்ஹல்ஸ்: வால்நட் ஹல்ஸ் என்பது வால்நட்டின் ஓட்டை சுற்றியுள்ள வெளிப்புற பச்சை அல்லது பழுப்பு நிற தோலாகும். இவை இயற்கையான நிறமிகளை கொண்டுள்ளன. இது முடியிலுள்ள கெரட்டின் உடன் இணைந்து கருமை நிறத்தை தருகிறது.
வால்நட் ஹல்ஸ்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் ஆறியதும் முடியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து அலசவும். வால்நட் சாயம் தோல் மற்றும் ஆடைகளை கறைப்படுத்தும் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கோக்கோ பவுடர்: இது தலைமுடிக்கு பழுப்பு நிறத்தை சேர்க்கும். சிறிதளவு கோக்கோ பவுடரை தண்ணீர் அல்லது கண்டிஷனருடன் கலந்து பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ள வேண்டும். தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
பீட்ரூட் சாறு: இது கூந்தலில் கருமை நிறத்தை அதிகரிக்கும் மற்றும் நுட்பமான சிவப்பு நிறத்தையும் சேர்க்கும். பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து அத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை கலந்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். ஒரு செம்பழுப்பு நிறத்திற்கு தலைமுடி மாறி இருக்கும்.